ஒரே கிராமத்தில் 7 வீடுகளில் தொடர் திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சிவமொக்கா அருகே ஒரே கிராமத்தில் 7 வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-07-06 15:04 GMT

சிவமொக்கா;

வீட்டின் பூட்டை உடைத்து...

சிவமொக்கா மாவட்டம் ஆயனூர் கோட்டை பகுதியை சேர்ந்தவர் அமீர்ஜான். இவர் சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதனை அறிந்த மா்மநபர்கள் சிலர் அமீர்ஜானின் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

அப்போது அமீர்ஜானின் எதிர்வீட்டில் இருந்தவா்கள் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளனர். ஆனால் வெளியே யாரும் இல்லை. அமீர்ஜான் தான் வெளியூரில் இருந்து வந்துவிட்டதாக எண்ணியுள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் புகுந்த மா்மநபர்கள் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர். இதையடுத்து மறுநாள் காலை வீடு திரும்பிய அமீர்ஜான், வீட்டின் கதவின் திறந்து கிடப்பதை கண்டு, உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை-பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர் திருட்டு

இதே போல் அதே பகுதியில் உள்ள மேலும் 6 வீடுகளிலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அந்த வீடுகளிலும் ஆள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் நகை-பணத்தை திருடி சென்றுள்ளனர்.

அமீர்ஜான் வீட்டில் 17 கிராம் தங்கநகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கமும், அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவர் வீட்டில் 50 கிராம் தங்கநகை மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கமும், கிரிஜம்மா என்பவர் வீட்டில் 10 கிராம் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டதும் தெரியவந்தது.

மொத்தம் 7 வீடுகளில் இருந்தும் 85 கிராம் நகைகளும், ரூ.74 ஆயிரம் ரொக்கமும் திருட்டு போயிருந்தது. இந்த தொடர் திருட்டு குறித்து கும்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.


பின்னர் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு


இதுகுறித்து கும்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்