செந்தில் பாலாஜிக்கு விரைந்து ஜாமீன் வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் வாதம்

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, கடந்த 13 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார்.

Update: 2024-07-22 20:21 GMT

புதுடெல்லி,

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி விவகாரம் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரும் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, அகஸ்டின் ஜார்ஜ் மசி அடங்கிய அமர்வு விசாரித்தது.

செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, 'உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மனுதாரர் கடந்த 13 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார்.

செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 2020, பிப்ரவரி 2-ஆம் தேதி சோதனையிட்டது. அதில் எச்பி ஹார்டு டிஸ்க், லேப்டாப், எஸ்எஸ்டி, மெமரி கார்டு, பென் டிரைவ் ஆகிய 5 சாதனங்களை கைப்பற்றியது.

இருப்பினும் அமலாக்கத் துறை, சோதனையில் கைப்பற்றாத ஹார்டு டிஸ்க் கோர்ட்டில் சமர்பித்துள்ளது. 2013-14, 2021-22 ஆகிய காலக்கட்டத்தில் செந்தில் பாலாஜி வங்கி கணக்கில் 1.34 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013-14 காலக்கட்டத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதான புகார் எழவில்லை. 2017-18 தொடங்கி 2020-21 காலக்கட்டம் வரை செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வுக்கான ஊதியமாக 68 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். மீதமுள்ள வருவாய் விவசாயம் போன்றவற்றில் கிடைத்தது. இதை அமலாக்கத் துறை கவனிக்க தவறிவிட்டது.

பண மோசடி வழக்கில் அவருக்கு எதிராக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இதே விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளது. இதே வழக்கில் 2,247 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகும், செந்தில் பாலாஜியை விசாரிக்க ஒப்புதல் கிடைக்காததால் விசாரணை தொடங்கவில்லை. கே.ஏ. நஜீப் வழக்கில் விரைந்து விசாரிக்கப்படாத வழக்கில் ஜாமீன் வழங்க முடியும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இதுபோல ஜாவீது குலாம் ஷேக் வழக்கில், தண்டனைக்காக ஜாமீன் வழங்காமல் இருக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. உடல் நலம் குன்றி இருப்பதால் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், அறுவை சிசிச்சை செய்து கொண்டவர்களை நோயுற்றவர் அல்லது தளர்ந்தவர் எனக் கூற முடியுமா? எனக் கேட்டு வாதங்களை மீண்டும் தொடரும் வகையில் விசாரணையை நாளை (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்