கர்நாடக சட்டசபை தேர்தலில் முதியவர்கள் வீட்டில் இருந்தே வாக்களித்தனர்

நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக சட்டசபை தேர்தலில் 80 வயதான முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களித்தனர். வருகிற 6-ந் தேதி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

Update: 2023-04-29 22:07 GMT

பெங்களூரு:-

நாட்டிலேயே முதல் முறை

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, கர்நாடகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 12.15 லட்சம் வாக்காளர்களும், 5.71 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். வீட்டில் இருந்தே ஓட்டுப்போடுவதற்கு முதலில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து விண்ணப்ப படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருக்க வேண்டும். அதன்படி, வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட 99 ஆயிரத்து 529 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள்.

வாக்குப்பதிவு தொடங்கியது

அவர்களில், 80 வயதுக்கு மேற்பட்ட 80 ஆயிரத்து 250 பேரும், மாற்றுத்திறனாளிகள் 19 ஆயிரத்து 279 பேரும் ஆவார்கள். இதில், பெங்களூருவில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க விண்ணப்பித்திருந்த 99 லட்சத்து 526 பேருக்கான ஓட்டுப்பதிவு நேற்று தொடங்கியது. வருகிற 6-ந் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், 80 வயதானவர்கள் ஓட்டளிக்க காலஅவகாசம் உள்ளது.

அதாவது மாற்றுத்திறனாளிகள், 80 வயதானவர்கள் வீட்டுககு நேற்று முதல் தேர்தல் அதிகாரிகள் சென்றார்கள். அவர்களுடன் போலீசாரும் சென்றிருந்தனர். இதற்காக வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான பொருட்களையும் எடுத்து சென்றனர். வாக்குச்சீட்டு, வாக்காளர்கள் மறைந்து நின்றபடி ஓட்டுப்போடுவதற்கான அட்டைகள், வாக்குப்பெட்டி உள்ளிட்டவற்றை தேர்தல்கள் அதிகாரிகள் எடுத்து சென்றார்கள்.

முன்கூட்டியே தகவல்

பின்னர் வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போடுவதை தேர்தல் அதிகாரிகள் வீடியோவும் எடுத்து கொண்டனர். அதன்பிறகு, மாற்றுத்திறனாளிகளின் வீட்டில் இருந்து வாக்குப்பெட்டிகளை தேர்தல் அதிகாரிகள் எடுத்து சென்றனர். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று மாற்றுத்திறனாளிகள், 80 வயதானவர்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏராளமான மாற்றுத்திறனாளிகள், 80 வயதானர்கள் வீட்டில் இருந்த படியே ஓட்டுப்போட்டு ஜனநாயக கடமையாற்றி இருந்தனர். ஓட்டுப்போட விண்ணப்பித்தவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் வருவது பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் வயதானவர்கள் இருந்தால், முறைப்படி வாக்குச்சீட்டுவை கொடுத்து ஓட்டுப்போட செய்வார்கள்.

வயதானவர்கள் வரவேற்பு

ஒரு வேளை அவசர வேலைக்காக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இல்லை என்றால், மீண்டும் ஒரு அவகாசம் வழங்கப்படும். அதாவது மறுபடியும் வருகிற 6-ந் தேதிக்குள் ஒரு முறை வீட்டிற்கு தேர்தல் அதிகாரிகள் வந்து ஓட்டுப்போடுவதற்கான நடைமுறைகளை செய்து கொடுப்பார்கள். வீட்டில் இருந்த படியே ஓட்டுப்போடும் நடைமுறையை கொண்டு வந்ததற்காக தேர்தல் ஆணையத்திற்கு வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்து ஓட்டுப்போட விண்ணப்பித்த 99 ஆயிரத்து 529 பேர் மட்டுமே இந்த அவகாசம் வழங்கப்படும். மற்ற மாற்றுத்திறனாளிகள், 80 வயதானவர்கள் வருகிற 10-ந் தேதி வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக சென்று ஓட்டுப்போடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்