விபத்தில் சிக்கும் வாகனங்களை 24 மணிநேரத்திற்குள் விடுவிக்கலாம்
விபத்தில் சிக்கும் வாகனங்களை உரிய ஆவணங்கள் பெற்று 24 மணிநேரத்தில் விடுவிக்கலாம் என்றும், போலீஸ் நிலையங்கள் முன்பு நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் போலீசாருக்கு, போக்குவரத்து சிறப்பு கமிஷனர் சலீம் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
விபத்தில் சிக்கும் வாகனங்களை உரிய ஆவணங்கள் பெற்று 24 மணிநேரத்தில் விடுவிக்கலாம் என்றும், போலீஸ் நிலையங்கள் முன்பு நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் போலீசாருக்கு, போக்குவரத்து சிறப்பு கமிஷனர் சலீம் உத்தரவிட்டுள்ளார்.
24 மணி நேரத்திலேயே...
பெங்களூருவில் விபத்தில் சிக்கும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வருகிறார்கள். அவ்வாறு கொண்டு வரப்படும் வாகனங்கள் போலீஸ் நிலையங்கள் முன்பாகவும், அக்கம்பக்கத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து போலீஸ் சிறப்பு கமிஷனர் சலீம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூருவில் விபத்தில் சிக்கும் வாகனங்களை மீட்டு வந்து போலீஸ் நிலையங்கள் முன்பாக மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கின்றனர். இதன் காரணமாக போலீஸ் நிலையத்தின் முன்பாக அசுத்தமாகவும், தூய்மை இல்லாமலும் காணப்படுகிறது. இதுபோன்று விபத்தில் சிக்கும் வாகனங்களை போலீஸ் நிலையம் முன்பாக போலீசார் நிறுத்தி வைக்க வேண்டிய அவசியமே இல்லை. விபத்து நடந்த 24 மணிநேரத்திலேயே உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விடலாம்.
வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம்
விபத்து நடந்ததும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அந்த வாகனத்தை பார்வையிட்டு போலீசாரிடம் ஒரு அறிக்கை வழங்குவார்கள்.
அந்த அறிக்கை இருந்தாலே வழக்குக்கு போதுமானதாகும். மாத கணக்கில் போலீஸ் நிலையங்கள் முன்பு நிறுத்துவதால் எந்த பயனும் இல்லை. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பார்வையிட்டு, அறிக்கை அளித்ததும், வாகனங்களை பெற்று செல்லும்படி உரிமையாளர்களுக்கு தெரிவிக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் கோர்ட்டில் பிணைத்தொகை செலுத்தி, வாகனங்களை பெற்று செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.