கைதான சாமியாரின் மடத்தில் கட்டுக்கட்டாக ரூ.56 லட்சம் சிக்கியது

எம்.எல்.ஏ. சீட் வாங்கி கொடுப்பதாக மோசடி செய்ததில் கைதான மடாதிபதியின் மடத்தில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.56 லட்சம் சிக்கியது. சைத்ராவையும், மடாதிபதியையும் நேருக்கு நேர் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Update: 2023-09-20 22:07 GMT

பெங்களூரு:

எம்.எல்.ஏ. சீட் வாங்கி கொடுப்பதாக மோசடி செய்ததில் கைதான மடாதிபதியின் மடத்தில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.56 லட்சம் சிக்கியது. சைத்ராவையும், மடாதிபதியையும் நேருக்கு நேர் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ரூ.5 கோடி மோசடி

உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் தொழில்அதிபர் கோவிந்தபாபு பூஜாரி. இவருக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.5 கோடி வாங்கி மோசடி செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி தொடர்பாக இந்து அமைப்பின் பெண் பிரமுகர் சைத்ரா குந்தாப்புரா, பா.ஜனதா கட்சியின் பிரமுகர் ககன் கடூரு உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு இருந்தார்கள்.

இந்த மோசடியில் விஜயநகர் மாவட்டம் ஹூவினகடஹள்ளி தாலுகாவில் உள்ள ஹிரேகடஹள்ளி கிராமத்தில் இருக்கும் காலு மடத்தின் மடாதிபதி அபினவ காலஸ்ரீ ஒடிசாவில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் நேற்று மாலையில் அவர் ஒடிசாவில் இருந்து பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டார்.

மடாதிபதிக்கு போலீஸ் காவல்

இந்த நிலையில், நேற்று காலையில் பெங்களூரு கோர்ட்டில் மடாதிபதி அபினவ காலஸ்ரீ ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் ரூ.5 கோடி மோசடி குறித்து விசாரிக்க 14 நாட்கள் காவல் வழங்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால் வருகிற 29-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, மடாதிபதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதே நேரத்தில் மடாதிபதி சிக்கியதை தொடர்ந்து விஜயநகர் மாவட்டத்திற்கு சென்று அவருக்கு சொந்தமான மடத்திலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு நபர் மடத்திற்கு வந்து ஒரு பணப்பையை கொடுத்து விட்டு சென்றார். அதனை திறந்து பார்த்த போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணப்பையை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ரூ.56 லட்சம் சிக்கியது

அந்த பையில் ஒட்டு மொத்தமாக ரூ.56 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பணப்பையை மடத்தில் கொண்டு வந்து கொடுத்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், மைசூருவை சேர்ந்த பிரணவ் பிரசாத் என்பதும், அவர் வக்கீல் என்பதும் தெரிந்தது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பாக மடாதிபதியின் கார் டிரைவரான ராஜு, தன்னிடம் ரூ.60 லட்சம் இருப்பதாகவும், மடாதிபதி அந்த பணத்தை வைத்து கொள்ளும்படி கூறியதாகவும் பிரணவ் பிரசாத் தெரிவித்தார்.

ஆனால் மடாதிபதி கொடுத்த ரூ.60 லட்சத்தில் ரூ.4 லட்சத்தை டிரைவர் எடுத்து கொண்டு மீதி ரூ.56 லட்சத்தை கொடுத்தது தெரியவந்தது. எம்.எல்.ஏ. சீட் கொடுக்கும் விவகாரத்தில் ரூ.5 கோடி மோசடி நடந்திருப்பது பற்றியும், தலைமறைவாக இருந்த மடாதிபதி சிக்கி இருப்பதாலும், தன்னிடம் லட்சக்கணக்கான ரூபாய் இருப்பது தெரியவந்தால், தானும் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்ற பயத்தில் ரூ.56 லட்சத்தையும் மடத்தில் கொண்டு வந்து பிரணவ் பிரசாத் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, பிரணவ் பிரசாத்தை போலீசார் அனுப்பி வைத்தார்கள்.

நேருக்கு நேர் வைத்து...

தொழில்அதிபர் கோவிந்தபாபுவிடம் இருந்து ரூ.1½ கோடியை மடாதிபதி வாங்கி இருந்தார். அதில், தற்போது ரூ.56 லட்சம் மட்டுமே சிக்கி உள்ளது. மீதி பணத்தில் பினாமி பெயரில் சொத்துகளை வாங்கி மடாதிபதி குவித்திருந்தார். அதனை ஜப்தி செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக, மடத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்த சைத்ராவிடம் நேற்று 3-வது நாளாக போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றிருந்தார்கள்.

அதே நேரத்தில் மோசடியில் மடாதிபதி சிக்கினால் முக்கிய பிரபலங்கள் சிக்குவார்கள் என்று சைத்ரா கூறி இருந்தார். இதையடுத்து, சைத்ரா முன்னிலையில், மடாதிபதி அபினவ காலஸ்ரீயையும் வைத்து நேருக்கு நேர் விசாரித்து ரூ.5 கோடி மோசடிக்கு பின்னால் இருப்பவர்கள் யார்?, வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பதை கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் ரூ.5 கோடி மோசடி வழக்கின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. முக்கிய பிரபலங்கள் சிக்குவார்களா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

ரூ.50 லட்சத்தை...

உடுப்பி தொழில்அதிபரிடம் ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மடாதிபதி அபினவ காலஸ்ரீயை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். விசாரணையின்போது மடாதிபதி காவி உடை அணியாமல் சாதாரண ஆடையே அணிந்திருந்தார். அப்போது தொழில்அதிபரிடம் ரூ.1½ கோடி வாங்கியது உண்மை தான் என்றும், ரூ.50 லட்சத்தை திரும்ப கொடுத்து விடுவதாகவும், மீதி பணத்தை நானே கொடுத்து விடுகிறேன் என்றும் போலீசாரிடம் மடாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன் எம்.எல்.ஏ. சீட் கொடுப்பதாக கூறி பணத்தை வாங்கவில்லை, அவரை மோசடி செய்யவில்லை, பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக போலீசாரிடம் மடாதிபதி தொடர்ந்து கூறியது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்