சித்ரதுர்கா மடாதிபதியை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி

சித்ரதுர்கா மடாதிபதியை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி சித்ரதுர்கா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-05 18:45 GMT

சிக்கமகளூரு:

சித்ரதுர்கா மடாதிபதியை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி சித்ரதுர்கா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சித்ரதுர்கா மடாதிபதி

சித்ரதுர்காவில் முருக மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் மடத்திற்கு சொந்தமான பள்ளியில் தங்கி படித்து வந்த 10-ம் வகுப்பு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று போலீசார் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை போலீஸ் காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சித்ரதுர்கா 2-வது மாவட்ட கூடுதல் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை 3 நாட்கள், அதாவது வருகிற 8-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

கோஷமிட்டார்

அதையடுத்து போலீசார் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை, முருக மடத்தில் உள்ள அவரது படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மடாதிபதியின் படுக்கை மற்றும் சில பொருட்களையும், முக்கிய ஆவணங்கள், தடயங்களையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து போலீசார் மடாதிபதியை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே மடாதிபதிக்கு சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் வைத்து மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.

முன்னதாக மடத்தில் இருந்து மடாதிபதியை அழைத்து வரும்போது அவர், 'போலீசார் என் மீது வீண் பழி சுமத்தி உள்ளனர். எனக்கு எதிராக சதி நடக்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை. எந்த மாணவிகளையும் பலாத்காரம் செய்யவில்லை. மடத்தின் சொத்து, அதிகாரத்தை கைப்பற்ற என் விரோதிகள் என்னை சிக்க வைத்துள்ளனர்' என்று கோஷமிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்