வடகிழக்கு, காஷ்மீர் பகுதிகளில் கடந்த 8 ஆண்டுகளில் பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது: உள்துறை மந்திரி அமித் ஷா

டெல்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவிடத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Update: 2022-10-21 06:00 GMT

புதுடெல்லி,

லடாக்கின் ஹாட் ஸ்பிரிங் பகுதியில் 1959ஆம் ஆண்டு இதே நாளில் சீனப் படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 10 மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎப்) வீரர்கள் நினைவாக, இன்று, தேசிய காவல்துறை நினைவேந்தல் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவிடத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீரில் கடந்த 8 ஆண்டுகளில் பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது என்று கூறினார்.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:-

நாடு முழுவதும் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் தியாகத்தால் இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. கொரோனா பெருந்தொற்றின் போது நாடு முழுவதும் உள்ள காவல்துறை மற்றும் துணை ராணுவப் பணியாளர்கள் முக்கியப் பங்காற்றினர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரங்களை நீக்கியுள்ளோம். அதற்கு பதிலாக, அங்குள்ள இளைஞர்களுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியுள்ளோம். இதனால் இந்த பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வன்முறை குறைந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில், முன்பு பாதுகாப்புப் பணியாளர்கள் மீது கற்களை வீசியவர்கள் இப்போது பஞ்சாயத்து தலைவர்களாக ஆகிவிட்டனர். நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் ஏகலவ்யா பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படுகிறது, இந்த கட்டிடங்களில் தேசிய கொடி பறக்கிறது.

வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் கிளர்ச்சி பாதித்த பகுதிகளின் பாதுகாப்பு நிலைமை நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடந்த 8 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்