இன்று பட்ஜெட் தொடரின் 2-வது அமர்வு: நிதி மசோதாவை நிறைவேற்ற கூடுகிறது நாடாளுமன்றம்
அதானி விவகாரத்தையும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் பிரச்சினையையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல்கூட்டத்தொடர் என்ற வகையில் அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல்முறையாக உரை ஆற்றினார். அதே நாளில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தைத் தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. அதற்கு காரணம், அதானி நிறுவனங்கள் மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க் எழுப்பிய மோசடிக்குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் வேண்டும் என்ற கோரிக்கைகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கிளப்பி, தொடர் அமளியில் ஈடுபட்டதாகும்.
ஒரு வழியாக ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நடந்து, விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்துப்பேசினார். கடும் அமளிகளுக்கு மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த மாதம் 13-ந் தேதி முடிந்தது.
அதைத் தொடர்ந்து ஒரு மாத காலம் விடுமுறை விடப்பட்டது. துறை வாரியான மானியக்கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்ககுழுக்கள் ஆராய்ந்து, அறிக்கை அளிப்பதற்கு இந்த விடுமுறை பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மரபு.
இன்று முதல் 2-வது அமர்வு
இந்த நிலையில் பட்ஜெட் தொட ரின் 2-வது அமர்வுக்காக இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த அமர்வு, அடுத்த மாதம் 6-ந் தேதி முடிவுக்கு வரும்.
இந்த 2-வது அமர்வில், மத்திய அரசு நிதி மசோதாவை நிறைவேற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என தகவல்கள் கூறுகின்றன. அடுத்த நிதி ஆண்டுக்கான (2023-24) நிதி முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த இந்த நிதி மசோதா நிறைவேற்றப்பட்டாக வேண்டும்.
இதை நிதித்துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் உறுதி செய்தார். ரெயில்வே, பஞ்சாயத்து ராஜ், சுற்றுலா, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கான மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மானியங்களுக்கான கூடுதல் கோரிக்கைகளை முன்வைப்பார். காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான பட்ஜெட்டையும் அவர் சபையில் வைப்பார். இந்த 2 நடவடிக்கைகள் மட்டுமே இன்றைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.
2 முக்கிய பிரச்சினைகள்
ஆனால் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வை சுமுகமாக நடத்த விடுவார்களா என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன. அவற்றில் 2 பிரச்சினை கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
கடந்த முதல் அமர்வைப்போலவே இந்த அமர்விலும், அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மீண்டும் எழுப்பும். இதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அடுத்த விவகாரம், எதிர்க்கட்சி தலைவர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்து பிரச்சினையைக் கிளப்பும். டெல்லி மதுபானக்கொள்கை ஊழலில் துணை முதல்-மந்திரியாக இருந்து மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருப்பதும், ரெயில்வே வேலைகளுக்காக நிலங்களை எழுதி வாங்கிய ஊழலில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரி தேவி, முன்னாள் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதும், அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகளை அமலாக்கத்துறை நடத்தியதும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த விவகாரங்களை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து, புயலைக்கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எதிர்க்கட்சிகள் ஆலோசனை
இது தொடர்பாக விவாதிப்பதற் காக எதிர்க்கட்சிகள் இன்று காலை 10 மணிக்கு முக்கிய ஆலோசனை நடத்துகின்றன. இந்த ஆலோசனை, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே அறையில் நடக்கிறது. இதில் முக்கிய எதிர்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூடி பட்ஜெட் தொடரின் 2-வது அமர்வில் தங்கள் கட்சி பின்பற்ற வேண்டிய உத்தி பற்றி முடிவு செய்கிறார்கள்.
அனைத்துக்கட்சி கூட்டம்
இதற்கு இடையே மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவது பற்றி அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.