பெங்களூருவில் பள்ளி நேரம் மாற்றம்?; நாளை மறுநாள் கல்வித்துறை ஆலோசித்து முக்கிய முடிவு
பெங்களூருவில் பள்ளி நேரம் மாற்றப்படுகிறதா? என்பது குறித்து நாளை மறுநாள் ஆலோசித்து முக்கிய முடிவு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக தலைநகர் பெங்களூரு நகரில் பல்வேறு சாலைகளில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி வாகனங்களால் தான் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கர்நாடக ஐகோர்ட்டிலும் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, பெங்களூரு நகரின் போக்குவரத்து பிரச்சினையை கருத்தில் கொண்டு பள்ளி நேரத்தை மாற்றுவது தொடர்பாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் கோர்ட்டு பரிந்துரையை ஏற்று கர்நாடக பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி நேரத்தை மாற்றுவது குறித்து வருகிற 6-ந்தேதி (நாளை மறுநாள்) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பெற்றோர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பள்ளி நேரத்தை மாற்றுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.