கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவர்களை வகுப்பறையில் அடைத்து வைத்த கொடுமை
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் காதிகியா பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் காதிகியா பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு பயிலும் 34 மாணவர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி அவர்களை நேற்று முன்தினம் ஒரு வகுப்பறையில் அடைத்துவைத்தனர் ஆசிரியர்கள். சுமார் 5 மணி நேரம் அவர்களை சாப்பிடவோ, நீர் பருகவோ, ஏன், கழிப்பறை செல்லவோ கூட அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் அடைத்து வைத்திருப்பதாக அந்த மாணவர்களிடம் தெரிவித்த நிர்வாகிகள், அவர்கள் தங்கள் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கவும் அனுமதி மறுத்துவிட்டனர். சுமார் 5 மணி நேரம் கழிந்த நிலையில், கட்டணம் செலுத்தாதது குறித்த நோட்டீசை மாணவர்களுக்கு வழங்கி, அதை அவர்கள் தங்கள் பெற்றோரிடம் கொடுக்கும்படி கூறியிருக்கின்றனர்.
இந்த விவகாரத்தால் கோபமடைந்த பெற்றோர்கள் நேற்று பெருமளவில் திரண்டு, பள்ளி முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அந்த பெற்றோரில் ஒருவர், தான் ஏற்கனவே ஆன்லைன் வாயிலாக பள்ளிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டதாகவும், ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது தெரியவில்லை என்றும் கூறினார்.