ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

‘ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது’ என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.;

Update:2023-10-18 10:29 IST

பரஸ்பர சம்மதத்துடன் ஒரே பாலின ஜோடிகள் உறவு வைத்துக்கொள்வது குற்றமல்ல என்று கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே பாலின ஜோடிகள், தாங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த கோரிக்கையுடன் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றை விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ரவீந்திர பட், ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அதில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 18-ந் தேதி, அரசியல் சட்ட அமர்வு விசாரணையை தொடங்கியது.

மத்திய அரசு தனது நிலைப்பாட்டை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்தது. அதில், ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது.

இதுபோன்ற வழக்குகளில் அளிக்கப்படும் தீர்ப்பின் பின்விளைவுகளை சுப்ரீம் கோர்ட்டால் கணிக்க முடியாது என்றும், இது நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் கூறியது.

10 நாட்கள் தொடர் விசாரணை நடந்த பிறகு, கடந்த மே 11-ந் தேதி, தீர்ப்பு தேதி குறிப்பி டாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. நீதிபதி ஹிமா கோலியை தவிர, மற்ற 4 நீதிபதிகளும் தனித்தனியாக தீர்ப்பு எழுதி இருந்தனர்.

முதலில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

4 தனித்தனி தீர்ப்புகள் இந்த வழக்கில் உள்ளன. இந்த கோர்ட்டு, சட்டம் இயற்ற முடியாது. சட்டத்துக்கு அர்த்தம் சொல்ல முடியும். அது செல்லுமா, செல்லாதா என்று சொல்ல முடியும்.

புதிதாக சட்டம் இயற்ற முடியாது. அதை நாடாளுமன்றம்தான் செய்ய வேண்டும். ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கலாமா, அதற்காக சிறப்பு திருமண சட்டத்தில் திருத்தம் செய்யலாமா என்பது பற்றி நாடாளுமன்றம்தான் முடிவு எடுக்க வேண்டும்.

எனவே, நாங்கள் ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க முடியாது.

திருமணத்துக்கு 'தகுதியற்ற உரிமை' எதுவும் கிடையாது. ஒரே பாலின ஜோடிகள், தாங்கள் திருமணம் செய்து கொள்வதை அடிப்படை உரிமை என்று கோர முடியாது.

அதே சமயத்தில், திருமணம் என்பது நிலையானது என்றும், மாற்ற முடியாத பந்தம் என்றும் கூறப்படுவது சரியல்ல. திருமண முறையில் எத்தனையோ மாற்றங்கள் வந்துள்ளன.

வாழ்க்கைத்துணையை தேர்வு செய்வது அவரவர் சுய விருப்பம். ஒரே பாலின ஜோடிகளுக்கும் சம உரிமை உள்ளது. அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படக்கூடாது. அதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். ஒரே பாலின ஜோடிகள் மீது புகார் வந்தால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பு, போலீசார் பூர்வாங்க விசாரணை நடத்த வேண்டும்.

மேலும், ஒரே பாலின ஈர்ப்பு என்பது நகர்ப்புறங்களிலும், மேல்தட்டு நபர்களிடமும் மட்டுமே இருப்பதாக மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. ஒரே பாலின ஈர்ப்பு, வயது அடிப்படையில் இயல்பாக ஏற்படும் நிகழ்வு.

அதற்கு நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற பாகுபாடு கிடையாது. எந்த சாதி, வகுப்பினராக, நகர, கிராமப்புறத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரே பாலின ஆர்வலராக இருக்கலாம்.

மேலும், ஒரே பாலின ஜோடிகள், குழந்தையை தத்தெடுப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதால், தத்தெடுப்பு ஒழுங்குமுறைகள் அர்த்தமற்றதாக உள்ளன. வெவ்வேறு பாலின ஜோடிகள் மட்டுமே நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்று சட்டம் கருதக்கூடாது.

இதுதவிர, தத்தெடுத்தல், பள்ளிகளில் பெற்றோராக பதிவு செய்தல், வங்கிக்கணக்கு தொடங்குதல், வாரிசுரிமை, காப்பீட்டு வசதிகள் போன்ற கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒரே பாலின ஜோடிகளின் நியாயமான கவலைகள் தொடர்பான நிர்வாகரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆராய மந்திரிசபை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைப்பதாக மத்திய அரசு கூறியதை ஏற்றுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நீதிபதி எஸ்.கே.கவுல் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

ஒரே பாலின ஜோடிகளுக்கு குறிப்பிட்ட உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஒரே பாலின திருமண பந்தமும், வெவ்வேறு பாலின திருமண பந்தமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரே பாலின திருமண பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது, திருமண சமத்துவத்தை நோக்கிய நடவடிக்கையாக அமையும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நீதிபதி ரவீந்திர பட் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

குழந்தையை தத்தெடுக்க ஒரே பாலின ஜோடிக்கு அனுமதி இல்லாததால், தத்தெடுப்பு விதிமுறைகள் அர்த்தமற்றவை என்று சொல்ல முடியாது.

திருமணத்தை அடிப்படை உரிமையாக அரசியல் சட்டம் அங்கீகரிக்கவில்லை. ஒரே பாலின ஜோடிகள், வாழ்க்கைத்துணையை தேர்வு செய்ய உரிமை உள்ளது. எவ்வித இடையூறும் இன்றி சேர்ந்து வாழ அவர்களுக்கு உரிமை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நீதிபதி நரசிம்மா, ''திருமணத்துக்கு தகுதியற்ற உரிமை எதுவும் கிடையாது'' என்று கூறியுள்ளார்.

4 நீதிபதிகளும் தனித்தனி தீர்ப்பு அளித்தபோதிலும், ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க முடியாது என்று ஒருமனதாக தீர்ப்பு அளித்துள்ளனர்.

குழந்தையை தத்தெடுக்க முடியாது என்ற விதிமுறையை 3 நீதிபதிகள் உறுதி செய்தனர்.

இதற்கிடையே, இத்தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்பதாகவும், தனது நிலைப்பாடு ஏற்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்