ஒரே பள்ளி, கல்லூரி... ஒரே நேரத்தில் இரட்டையர்களுடன், இரட்டை சகோதரிகளுக்கு திருமணம்

மேற்கு வங்காளத்தில் ஒரே பள்ளி, ஒரே கல்லூரியில் படித்த இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் இரட்டையர்களை மணமுடித்த ஆச்சரியம் நடந்துள்ளது.

Update: 2022-12-08 12:47 GMT



கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தில் கிழக்கு புர்த்வான் மாவட்டத்தில் குர்மன் கிராமத்தில் வசித்து வரும் இரட்டை சகோதரிகள் அர்பிதா மற்றும் பராமிதா. பிறந்தது முதலே இவர்கள் படிப்பது, பயணம் செய்வது என ஒன்றாகவே பல்வேறு விசயங்களையும் மேற்கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் பாதர் மகளிர் பள்ளியில் ஒன்றாகவே படித்தனர். அதன்பின்பு ஒரே கல்லூரியில் படித்து, பட்டம் பெற்றனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பியுள்ளனர்.

இதனை தொழிற்சாலையில் பணியாற்றும் தங்களது தந்தையான கவுர்சந்திரா சான்ட்ராவிடம் கூறியுள்ளனர். அவரும், தங்களது மகள்களின் ஆசையை பூர்த்தி செய்ய முடிவு செய்துள்ளார். நல்ல, வசதியான மணமகன்களை அவர் தேடியுள்ளார்.

இதில், குர்மன் கிராமத்தில் லவ் பாக்ரே மற்றும் குஷ் பாக்ரே ஆகிய இரட்டையர்கள் இருப்பது பற்றிய விவரம் அவருக்கு தெரிய வந்தது. அவர்களின் குடும்பத்தினரும் தங்களது மகன்களுக்கு மணமகள்களை தேடி வந்துள்ளனர்.

இறுதியாக, மகள்களின் விருப்பப்படி இரட்டையர்களுக்கு தனது மகள்களை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவுர்சந்திரா மேற்கொண்டார்.

இதேபோன்று லவ் மற்றும் குஷ் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களும் மணமகள்களாக இரட்டையர்களை தேடி வந்துள்ளனர்.

இதனால், அர்பிதா மற்றும் பராமிதா இரட்டை சகோதரிகளை பற்றி தெரிய வந்ததும், தாமதிக்காமல் உடனே திருமணத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன் அவர்களது திருமணம் புர்த்வானில் சிறப்புடன் நடந்தேறியது.

இந்த திருமண உடையில் கூட அவர்கள் வேற்றுமை காட்ட விரும்பவில்லை. மணமகன்கள் இருவரும் நீல வண்ணத்தில் பஞ்சாபி உடையில் காட்சியளித்தனர். மணமகள்களும், ஒரே வண்ண சேலை, நகைகளின் வடிவமைப்பு, உடையலங்காரம் என ஒரே மாதிரியாக காட்சி தந்தனர்.

இந்த இரட்டையர்களை மணந்து கொண்ட இரட்டை சகோதரிகளின் அரிய திருமண நிகழ்வை, அதில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் அதிசயமுடன், ஆச்சரியமுடனும் கண்டு களித்தபடி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்