ஏப்ரல் 1-ந் தேதி முதல் 6 இலக்க தனித்த எண்ணுடன் கூடிய தங்க நகைகள் விற்பனைக்கே அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு
பழைய ஹால்மார்க் நகைகள் விற்பனைக்கு இம்மாதம் 31-ந் தேதிக்கு பிறகு அனுமதி அளிக்கப்படாது என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
தற்போது 'ஹால்மார்க்' தங்க நகைகளில், இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் (பி.ஐ.எஸ்) இலச்சினை, தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் 916 என்ற எண், நகையை ஆய்வு செய்து மதிப்பீடு அளிக்கும் மையத்தின் இலச்சினை, குறிப்பிட்ட கடையின் இலச்சினை ஆகிய 4 அடையாளங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்நிலையில், தங்க நகைகளுக்கு என்று 6 இலக்க 'ஹால்மார்க் தனித்த அடையாள எண்' கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்பிறகு, ஹால்மார்க் நகைகளில் 3 அடையாளங்கள் இடம்பெற்றன. அதாவது பி.ஐ.எஸ். இலச்சினை, தரத்தை குறிக்கும் 916 எண், ஆறு இலக்க 'ஆல்பாநியூமரிக்' (எண்ணும் எழுத்தும் சேர்ந்தது) ஹால்மார்க் தனித்த அடையாள எண் ஆகியவை பொறிக்கப்பட்டன. இவ்வாறு ஒவ்வொரு நகைக்கும் ஒரு தனிப்பட்ட எண் இடம்பெற்றது.
இந்நிலையில், தனித்த எண் இடம்பெறாத, 4 அடையாளங்கள் மட்டும் உள்ள பழைய ஹால்மார்க் நகைகள் விற்பனைக்கு தற்போது வரை அனுமதிக்கப்பட்டு வருகிறது. நகைக்கடைக்காரர்கள் தங்களிடம் உள்ள பழைய ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்வதற்கு சுமார் ஓராண்டு, 9 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பழைய ஹால்மார்க் நகைகள் விற்பனைக்கு இம்மாதம் 31-ந் தேதிக்கு பிறகு அனுமதி அளிக்கப்படாது என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் பழைய ஹால்மார்க் நகைகளும், புதிய ஹால்மார்க் நகைகளும் விற்பனை செய்யப்பட்டது வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
எனவே, வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல், பி.ஐ.எஸ். இலச்சினை, தூய்மையைக் குறிக்கும் 916 எண்ணுடன், 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் கூடிய தங்க நகைகள், தங்க கலைப்பொருட்கள் விற்பனைக்குத்தான் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்த பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் மக்கள் ஏற்கனவே வாங்கியுள்ள, 4 இலச்சினைகளுடன் கூடிய பழைய ஹால்மார்க் நகைகள் செல்லுபடியாகும் என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.