அன்னை தெரசாவின் 25வது நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை!
புனித அன்னை தெரசாவின் 25வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது இல்லத்தில் பிரார்த்தனை நடைபெற்றது.;
கொல்கத்தா,
புனித அன்னை தெரசாவின் 25வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது இல்லத்தில் பிரார்த்தனை நடைபெற்றது.
கொல்கத்தாவில் உள்ள (தி மதர் ஹவுஸ் ஆப் தி மிஷனரீஸ் ஆப் சேரிட்டி) தொண்டு நிறுவன அன்னை இல்லத்தில் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.மிஷனரிஸ் ஆப் சேரிட்டி(தொண்டு நிறுவனம்) சபையின் நிறுவனரான அன்னை தெரசாவின் நினைவாக பிரார்த்தனை நடைபெற்றது.
அன்னை தெரசாவின் உண்மையான பெயர் ஆக்னஸ் கோன்ஷா போஜாக்ஷியு என்பதாகும். 1910 இல் ஸ்கோப்ஜியில் அல்பேனிய இன குடும்பத்தில் பிறந்தவர் அன்னை தெரசா. அவர் தன் 18 வயதில் தனது வீட்டை விட்டு வெளியேறினார்.பின்னர் அயர்லாந்தின் ராத்பார்ன்ஹாமில் அமைந்துள்ள 'சிஸ்டர்ஸ் ஆப் லொரேட்டோ'வில் சேர்ந்தார்.
அவர் முதன்முறையாக 1920களின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். கொல்கத்தாவின் செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் 15 ஆண்டுகள் வரலாறு மற்றும் புவியியல் கற்பித்தார். அதன்பின், 1948இல், அவர் தேவாலயத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அதன்படி இயலாதவர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்காக கொல்கத்தாவில் உள்ள சேரி பகுதிகளில் ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றினார்.
தெரசா தனது குழந்தைப் பருவத்தில், மிஷனரிகளின் கதைகளால் ஈர்க்கப்பட்டார். இதனால் 1950இல், அவர் ரோமன் கத்தோலிக்க மத சபைக்கு அடிக்கல் நாட்டினார். இப்போது மிஷனரிஸ் ஆப் சேரிட்டி என்று பிரபலமாக அறியப்படுகிறது. 5000க்கும் அதிகமான தொண்டு நிறுவனங்கள்(மிஷனரிஸ் ஆப் சேரிட்டி) உள்ளன. அல்பேனியன், பெங்காலி, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் செர்பியன் ஆகிய ஐந்து மொழிகளில் அன்னை தெரசா சரளமாக பேசக்கூடியவராக இருந்தார்.
1982 லெபனான் போரின் போது, அன்னை தெரசா, பாலஸ்தீனிய கெரில்லாக்கள் மற்றும் இஸ்ரேலிய இராணுவம் ஆகிய இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி ஒரு தற்காலிக போர்நிறுத்தம் ஏற்படுத்தினார்.
மனிதகுலத்திற்கான அற்புதமான அன்னை தெரசாவின் சேவையை பாராட்டி கவுரவிக்கும் பொருட்டு அவருக்கு 1979ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போதும் கூட, ரொக்கப்பரிசான 1 லட்சத்து 92 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை இந்தியாவின் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக வழங்குமாறு நடுவர் மன்றத்தை அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னை தெரசாவுக்கு 1980 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.இறுதியாக அன்னை தெரசா அவர்கள் செப்டம்பர் 5, 1997இல் தனது 87 வயதில் காலமானார். இன்று அன்னை மேரி தெரசாவின் 25வது நினைவு நாள்.
அன்னை தெரசா, நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி, மத்திய அரசால் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. செப்டம்பர் 2017இல், அன்னை தெரசா கொல்கத்தா உயர் மறைமாவட்டத்தின் புரவலர் புனிதர் பட்டத்தை வாடிகன் போப் அறிவித்து கவுரவித்தார்.