புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி நேற்று நடந்தது.

Update: 2023-09-08 22:07 GMT

பெங்களூரு:-

சிவாஜிநகர் பேராலயம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயம் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற அந்தஸ்து பெற்றதாகும். பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த பேராலயத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து மாதாவை வேண்டிக்கொள்கிறார்கள்.

ஆண்டுதோறும் மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் ேததி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்பட பல்வேறு மொழிகளில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன.

தேர் பவனி

சிவாஜிநகர் பேராலய திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று கோலாகலமாக நடந்தது. தேர்பவனி தொடங்குவதற்கு முன்னதாக திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாலையில் ஆரோக்கியமாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் சிவாஜிநகரில் முக்கிய வீதிகளில் பவனி வந்தது.

தேர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மின்னொளியில் தேர் ஜொலித்தது. தேர் பவனியின்போது திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதா தேர் மீது பூக்களை வீசி 'மரியே வாழ்க' என கோஷம் எழுப்பினர்.

போலீஸ் பாதுகாப்பு

இதில், முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு தேர் பவனியை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், சிவாஜிநகர் ெதாகுதி எம்.எல்.ஏ. ரிஸ்வான் ஹர்ஷத் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் தேர் பவனியையொட்டி சிவாஜிநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்