அயோத்தியில் காணும் இடமெல்லாம் காவிக்கொடி..ஜெய் ஸ்ரீ ராம் வாசகம்
அயோத்தியில் அனைத்துக்கடைகளிலும் வெவ்வேறு அளவுகளில் காவிக்கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அயோத்தி,
அயோத்தியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெறுகிறது.
ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணி அகற்றும் பிரான் பிரதிஷ்டை விழா. பிரதமர் மோடி தலைமையில் இன்று பகல் 12.20 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் ராமர் கண்ணை மறைத்து கட்டப்பட்டுள்ள மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டு, சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இனி, அயோத்தி வரும் பக்தர்களுக்கு பால ராமர் காட்சிதர உள்ளார். இதையொட்டி, மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு அயோத்தி நகர தெருக்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
கோவிலை நோக்கிய பிரதான சாலைகளான ராம பாதை, தர்ம பாதைகளில் நடந்து செல்லும் அனைத்து பக்தர்களும் கைகளில் காவிக் கொடிகளை ஏந்தியிருந்தனர். இதற்காக, அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளிலும் 10 வெவ்வேறு அளவுகளில் காவிக் கொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அந்தக் காவிக் கொடிகளில் ஸ்ரீ ராமர், அனுமன், ஜெய் ஸ்ரீ ராம் வாசகம், ராமர் கோவில் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீ ராமரின் ஆயுதமான வில்-அம்பு' வடிவமைப்புடன் கூடிய தெருவிளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. நகரின் வீடுகள், தர்மசாலைகள், மடங்கள், கடைகள், விடுதிகள் என அனைத்து இடங்களிலும் காவிக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
அயோத்தியில் பிரசித்தி பெற்ற 'அஸார்பி பவன்' கோவில் கோபுரத்தில் பிரமாண்ட காவிக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த அப்பகுதி முன்னாள் மாநகராட்சி மன்ற உறுப்பினர் கூறுகையில்,
'இந்த பகுதியில் மட்டும் 5,000 மக்கள் வசிக்கின்றனர். கடந்த சில நாட்களில் 500 காவிக் கொடிகளை வீடுகள்தோறும் வழங்கியுள்ளோம். வீட்டில் குடியிருப்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, சில வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கொடிகளும் வழங்கியுள்ளோம் என்றார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதால் இனி ராம ராஜ்ஜியம்தான் என்று மக்கள் மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர்.