'துரோகியான சச்சின் பைலட்டை, ராஜஸ்தான் முதல்-மந்திரி ஆக்க முடியாது' - அசோக் கெலாட் ஆவேசம்
சச்சின் பைலட் துரோகி, அவரை ராஜஸ்தான் முதல்-மந்திரி ஆக்க முடியாது என்று அசோக் கெலாட் ஆவேசமாக கூறினார்.;
புதுடெல்லி,
ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், அங்கு முதல்-மந்திரியாக துடிக்கிற சச்சின் பைலட்டுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது.
இந்த நிலையில், அசோக் கெலாட் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சச்சின் பைலட் 2020-ம் ஆண்டு காங்கிரசுக்கு எதிராக கொடி பிடித்தவர். எனது அரசை கவிழ்க்க முயன்றார். துரோகியான அவரை ராஜஸ்தான் முதல்-மந்திரி ஆக்க முடியாது.
அவரைத்தவிர யாரும் முதல்-மந்திரி ஆகலாம்....
பைலட் காங்கிரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தொடர்பு உள்ளது. அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களை ஒரு மாதத்துக்கும் மேலாக குருகிராமில் ஒரு விடுதியில் தங்க வைத்தனர். மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்தார். பைலட் உள்ளிட்ட அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு உதவும் என கட்சித்தலைமை கருதினால், என்னை மாற்றட்டும். பைலட் தவிர்த்து 102 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் யாரை வேண்டுமானாலும் முதல்-மந்திரி ஆக்கட்டும்.
கட்சியின் தலைவர், தனது சொந்த கட்சியின் அரசை கவிழ்க்க முயற்சித்த உதாரணத்தை ஒருவரும் கண்டிருக்க முடியாது.
நம்பிக்கை
இதுவரை அவர் எம்.எல்.ஏ.க்களிடம் மன்னிப்பு கேட்டதில்லை. அவர் மன்னிப்பு கேட்டிருந்தால், நான் (சோனியாவிடம்) மன்னிப்பு கேட்க வேண்டி வந்திருக்காது. கட்சித்தலைமை பைலட்டை முதல்-மந்திரியாக்க முடிவு எடுத்தால், என்ன செய்வீர்கள் என கேட்கிறீர்கள். இது அனுமானத்தின் அடிப்படையிலானது. இது எப்படி நடக்கும்? அது நடக்காது.
ராஜஸ்தானுக்கு காங்கிரஸ் தலைமை நீதி வழங்கும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.