சபஹர் துறைமுக ஒப்பந்தம்.. அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு இந்தியா பதில்
சபஹர் துறைமுக ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, ஈரானுடனான வணிக ஒப்பந்தம், பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான 'சாத்தியமான ஆபத்து' என கூறியுள்ளது.;
கொல்கத்தா:
நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான துறைமுகமாக ஈரானின் சபஹர் துறைமுகம் விளங்குகிறது. இந்த துறைமுகத்தை நிர்வகிக்கும் நீண்ட கால குத்தகையை, அதாவது 10 ஆண்டுகளுக்கு துறைமுகத்தை நிர்வகிக்கும் உரிமையை இந்தியா பெற்றிருக்கிறது. இதுதொடர்பாக இந்தியா-ஈரான் இடையே சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானுடனான எந்தவொரு வணிக ஒப்பந்தமாக இருந்தாலும், பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான 'சாத்தியமான ஆபத்து' என அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது 'ஒய் பாரத் மேட்டர்ஸ்' என்ற புத்தகத்தின் வங்காள மொழி பதிப்பை கொல்கத்தாவில் இன்று வெளியிட்டார். அதன்பின்னர் நடந்த கலந்துரையாடலின்போது, சபஹர் துறைமுக ஒப்பந்தம் தொடர்பான அமெரிக்காவின் கருத்து குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், "அமெரிக்கா தெரிவித்த சில கருத்துக்களை நான் பார்த்தேன். ஆனால், இது உண்மையில் அனைவரின் நலனுக்கானது என்பதை மக்களிடம் நம்ப வைத்து புரிந்துகொள்ள வைப்பது போன்ற ஒரு கேள்வி என நினைக்கிறேன். மக்கள் இதை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. அவர்கள் (அமெரிக்கா) கடந்த காலத்தில் அவ்வாறு செய்யவில்லை. எனவே, சபஹரில் உள்ள துறைமுகத்தைப் பற்றிய அமெரிக்காவின் சொந்த அணுகுமுறையைப் பார்க்கும்போது, சபஹருக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக அமெரிக்கா பாராட்டுவதாக தெரிகிறது." என்றார்.
சபஹர் துறைமுகத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.