கோலார் தங்கவயலில் ரூபாகலா சசிதர் 2-வது முறையாக வெற்றி

கோலார் தங்கவயல் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரூபாகலா சசிதர் 2-வது முறையாக வெற்றி பெற்றார்.

Update: 2023-05-13 18:45 GMT

கோலார் தங்கவயல்-

கோலார் தங்கவயல் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரூபாகலா சசிதர் 2-வது முறையாக வெற்றி பெற்றார்.

கோலாரில் காங்கிரஸ்  ஆதிக்கம்

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ந் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையில் அதிகப்படியான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பது அந்த கட்சியினரிடையே உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கோலார் மாவட்டத்தில் அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. இந்த மாவட்டத்தில் கோலார் தங்கவயல், முல்பாகல், பங்காருபேட்டை, சீனிவாஸ்பூர், சிந்தாமணி, மாலூர் ஆகிய 6 தொகுதிகள் உள்ளது. இதில் முல்பாகல் மற்றும் சீனிவாஸ்பூர் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்றது. கோலார் தங்கவயல், பங்காருபேட்டை, மாலூர், சிந்தாமணி ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.

2-வது முறையாக வெற்றி

இதில் கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபாகலா சசிதர், தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றார். இவர் 81,560 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் அஸ்வினி சம்பங்கி 31,102 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

ஆரம்பம் முதலே ரூபாகலா சசிதர் முன்னிலை வகித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த வெற்றியால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் இந்த வெற்றியை அவர் கொண்டாடும் வகையில் ஊர்வலமாக வந்து, கோலார் தங்கவயல் தொகுதி மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார். இதையடுத்து அவர் ஊர்வலமாக சென்று ராபர்ட்சன்பேட்டையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

இனிப்பு வழங்கி  கொண்டாட்டம்

இதையடுத்து சுராமல் சதுக்கத்திற்கு சென்ற அவர், அங்கிருந்த அம்பேதக்ர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து மறைந்த முன்னாள் எல்.எல்.ஏ. சி.எம்.ஆறுமுகத்தின் சிலைக்கும் மாலை அணிவித்தார். இதை தொடர்ந்து கட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி தனது வெற்றியை கொண்டாடினார். 

Tags:    

மேலும் செய்திகள்