சட்டசபை துணை சபாநாயகராக ருத்ரப்பா லமானி போட்டியின்றி தேர்வு

கர்நாடக சட்டசபை துணை சபாநாயகராக ருத்ரப்பா லமானி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Update: 2023-07-06 18:45 GMT

பெங்களூரு:-

துணை சபாநாயகர் தேர்தல்

கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் பதவிக்கு 6-ந் தேதி (நேற்று) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆளும் காங்கிரஸ் சார்பில் ருத்ரப்பா லமானி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை தவிர வேறு யாரும் இந்த பதவிக்கு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் துணை சபநாாயகர் தேர்தல் நேற்று சட்டசபையில் நடைபெற்றது.

சபாநாயகர் யு.டி.காதர், துணை சபாநாயகர் தேர்தலை நடத்தினார். இதில் ருத்ரப்பா லமானியின் பெயரை காங்கிரஸ் தலைமை கொறடா அசோக் பட்டண் முன்மொழிந்தார். அதைத்தொடர்ந்து துணை சபாநாயகராக ருத்ரப்பா லமானி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக சபாநாயகர் யு.டி.காதர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சபாநாயகர் வாழ்த்து

அதைத்தொடர்ந்து ருத்ரப்பா லமானியை டி.கே.சிவக்குமார் அழைத்து வந்து அவரது இருக்கையில் அமர வைத்தார். அவருக்கு முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து கூறினர்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் யு.டி.காதர் அவரை வாழ்த்தி பேசுகையில், "ருத்ரப்பா லமானி 4 முறை இந்த சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராணிபென்னூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு வந்துள்ளார். அவர் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

நீதி வழங்க வேண்டும்

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அவரை வாழ்த்தி பேசும்போது,

"ருத்ரப்பா லமானி மந்திரி ஆக வேண்டும் என்று விரும்பினார். அவர் ஏற்கனவே மந்திரியாக பணியாற்றியவர். தற்போது அவரை நாங்கள் கட்டாயப்படுத்தி துணை சபாநாயகர் பதவியை ஏற்க வைத்துள்ளோம். அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். எதிரிகள் நண்பராகலாம். சபாநாயகர் பீடத்தில் அமர்ந்து நீங்கள் அனைவருக்கும் நியாயம் வழங்க வேண்டும். உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசுகையில், "எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா லமானி. அவர் மந்திரி ஆகி இருக்க வேண்டும். அவருக்கு துணை சபாநாயகர் பதவி கிடைத்துள்ளது. நீங்கள் சபாநாயகர் பீடத்தில் அமர்ந்து எங்களுக்கு நீதி வழங்க வேண்டும். நீங்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. மாற்றம் ஒன்றே நிரந்தரமானது. கர்நாடகத்தில் விரைவில் அந்த மாற்றம் நிகழும். உங்களுக்கு எனது வாழ்த்துக்களை

தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்