மேற்கு வங்காள சட்டசபையில் 7 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் இடைநீக்கம் ரத்து
மேற்கு வங்காள சட்டசபையில் 7 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் இடைநீக்கத்தை ரத்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த மார்ச் 28-ந்தேதி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி உள்பட 5 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் பீமன் பானர்ஜி இடைநீக்கம் செய்தார். முன்னதாக மார்ச் மாத தொடக்கத்தில் அவையில் கவர்னர் உரை நிகழ்த்தியபோது அமளியில் ஈடுபட்ட 2 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த 7 எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து அவர்களை மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பா.ஜனதா உறுப்பினர்கள் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தனர்.
சட்டசபையின் 2-வது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், பா.ஜனதா உறுப்பினர்கள் இருவர் இது தொடர்பாக தீர்மானங்களும் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவை விவகாரத்துறை மந்திரி பார்த்தா சட்டர்ஜியுடன் சபாநாயகர் பீமன் பானர்ஜி ஆலோசனை நடத்தினார். பின்னர் 7 பா.ஜனதா உறுப்பினர்களின் இடைநீக்க உத்தரவை அவர் ரத்து செய்தார்.