ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய பா.ஜனதா திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

எங்கள் கட்சியை போலி சிவசேனா என்று அழைத்தவர்கள். ஆர்.எஸ்.எஸ்.சையும் போலி என்று அழைப்பார்கள் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Update: 2024-05-19 01:21 GMT

மும்பை,

மராட்டியத்தில் இறுதிக்கட்டமாக 13 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. அனல் பறந்த பிரசாரம் நேற்று ஓய்ந்தது. மும்பையில் நடந்த இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

சிவசேனாவை எப்படி பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய முயன்றார்களோ, அதேபோன்ற ஆட்டத்தை எதிர்காலத்தில் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். உடன் விளையாடுவார். பா.ஜனதா ஆட்சிக்கு வருவது ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு மிகப்பெரிய ஆபத்து. ஏனெனில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அவர்கள் தடை செய்வார்கள். கடந்த காலத்தில் சர்தார் வல்லபாய் படேல், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதித்தார்.

எங்கள் கட்சியை போலி சிவசேனா என்று அழைத்தவர்கள். ஆர்.எஸ்.எஸ்.சையும் போலி என்று அழைப்பார்கள். ஒட்டுமொத்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் உங்களை பிரதமராக்க பாடுபடுகிறார்கள். நீங்கள் வளர்வதற்கும், உங்களுக்கு அரசியல் அதிகாரத்தை கொடுத்ததற்கும் உதவிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஏன் தடை செய்ய திட்டமிடுகிறீர்கள். 'இந்தியா' கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, மோடியின் வேலைக்காரர் போல செயல்படும் தேர்தல் ஆணையரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பா.ஜனதாவின் வேலைக்காரர் போல செயல்படும் அவர் பதவி நீக்கப்படுவார்.

Tags:    

மேலும் செய்திகள்