அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்... நாளை தொடங்கும் ஆர்.எஸ்.எஸ். செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை

நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 381 பொறுப்பாளர்கள் இந்த செயற்குழுவில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-04 12:52 GMT

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஊடகத்துறை பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வருடாந்திர அகில இந்திய செயற்குழு கூட்டம் நாளை முதல் 7-ம் தேதி வரை குஜராத் மாநிலம் புஜ் நகரில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாநிலத் தலைவர்கள், துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் பங்கேற்பார்கள்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோஹன் பாகவத், பொதுச்செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேய ஹொசபாலே, துணை பொதுச்செயலாளர் ஸ்ரீ டி. கிருஷ்ணகோபால், டாக்டர் மன்மோஹன் வைத்யா, ஸ்ரீ முகுந்தா, ஸ்ரீ அருண் குமார், ஸ்ரீ ராம்தத் சக்ரதார் மற்றும் அனைத்து அகில பாரத பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள். விஸ்வ ஹிந்து பரிஷத், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், பாரதீய ஜனதா கட்சி, பாரதீய மஸ்தூர் சங்கம், பாரதீய கிசான் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் அகில பாரத அமைப்பாளர்களும் இதில் பங்கேற்பார்கள்.

இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த கூட்டத்தில், சங்க வேலைகள் குறித்த ஆய்வு மற்றும் கடந்த செப்டம்பரில் புனேவில் நடைபெற்ற சங்கத்தின் பல்வேறு அமைப்புகளின் கூடுதலில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஆர்.எஸ்.எஸ். தலைவரின் விஜயதசமி உரையில் இடம்பெற்ற விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். சமுதாயத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றதாக சங்க வேலைமுறைகளில் தேவையான மாற்றங்கள், உதாரணமாக சங்கத்தின் முதலாமாண்டு முகாம் இரண்டாம் ஆண்டு முகாம், மூன்றாம் ஆண்டு முகாம்களில் 2024 முதல் புதிய பாடத்திட்டங்கள் அமல் செய்யப்படும்.

ஜனவரி 22 2024 அன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, நாட்டின் ஒவ்வொரு கிராமம், நகரங்களில் உள்ள கோவில்களில் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்படும். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். பின்னர் இந்த தகவல், அனைத்து ஸ்வயம்சேவகர்களுக்கும் அளிக்கப்படும், அதன் மூலம் இதில் சமுதாயமும் பங்கேற்க வழி ஏற்படும்..

டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரால் 1925-ல் துவக்கப்பட்ட சங்கம், 98 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 2025-ம் ஆண்டு நூற்றாண்டு வருவதையொட்டி, சங்கத்தை மேலும் விரிவுப்படுத்த வேலைகள் நடக்கின்றன. பலர் தங்கள் நேரத்தை கொடுக்க முன்வந்துள்ளனர், 2 ஆண்டுகளுக்கு முழுமையாக சங்க வேலை செய்ய பலர் முன்வந்துள்ளனர். இதை மையமாக வைத்து, தீர்மானிக்கப்பட்ட ஷாகா இலக்குகளின் நிலை குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய ஏற்கனவே யோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் இது குறித்த ஆய்வு மற்றும் அடுத்த ஒன்றரை வருடங்களில் அந்த இலக்குகளை அடைவது எப்படி என்பது குறித்தும் விவாதிக்கப்படும். இதுவரை நடந்துள்ள வேலைகள், மேலும் எவ்வாறு துரிதப்படுத்துவது போன்றவையும் விவாதிக்கப்படும். சங்க நூற்றாண்டு விழாவின் போது, அது பற்றிய புரிதலை சமுதாயத்தின் முன் எப்படி எடுத்து செல்வது என்பதும் ஆலோசிக்கப்படும்.

சர்சங்கசாலக் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) தனது விஜயதசமி உரையில், ஷாகா நடைபெறும் இடத்தை சுற்றி சமுதாய மாற்றம் ஏற்படுத்த வலியுறுத்தினார். சமூக ஒற்றுமை, சுற்றுசூழல் பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பு, பிளாஸ்டிக் தவிர்த்தல் மேலும் உதாரண குடும்பமாக வாழ்வது எப்படி என்று பேசினார். அத்துடன் சுதேசி, சமூக கடமை போன்றவற்றை ஸ்வயம்சேவகர்கள் தாங்கள் கடைபிடித்து, ஒரு உதாரணமாக இருந்து சமுதாயத்தையும் ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 381 பொறுப்பாளர்கள் இந்த செயற்குழுவில் பங்கேற்பார்கள். சங்க வேலைகள் பற்றி விவாதிக்கும்போது, நடைமுறையில் சந்திக்கும் விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். நாளை 5 காலை 9 மணிக்கு கூட்டம் துவங்கி, நவம்பர் 7 மாலை 6 மணிக்கு நிறைவடையும்.

Tags:    

மேலும் செய்திகள்