அரசு பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி

அரசு பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபர் சிக்கினார்.

Update: 2022-08-14 02:06 GMT

கேரளா:

எர்ணாகுளம் மாவட்டம் எடப்பள்ளி அருகே உள்ள போனேக்கரா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராம் (வயது 35). இவர் தனக்கு கேரள அரசியலில் செல்வாக்கு உள்ளதாகவும், மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அறிமுகம் உள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்த சில பெண்களிடம் கூறி உள்ளார்.

மேலும் அவர் அரசின் பால்வளத்துறை நிறுவனமான மில்மா நிறுவனத்தின் இடப்பள்ளி பிராந்திய அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கலமசேரி பகுதியை சேர்ந்த மினி என்ற பெண்ணிடம் ரூ.2½ லட்சம் பெற்று உள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கித்தராமல் அந்த பெண்ணை ஏமாற்றி உள்ளார். இதனால் அவர் கலமச்சேரி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ் ராம், பல பெண்களிடம் வேலை வாங்கித்தருவதாக ரூ.5 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமைறைவான சுரேஷ் ராமை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.பி.சந்தோஷ், சப்-இன்ஸ்பெக்டர் வி.ஜே.ஜோசப் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் மோசடியில் ஈடுபட்ட சுரேஷ் ராம், லுலுமால் அருகே உள்ள ஒரு பகுதியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சுரேஷ் ராமை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் எர்ணாகுளம் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்