விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்திய தொகை ரூ.2.5 லட்சம் கோடி: பிரதமர் மோடி

நாட்டில் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2.5 லட்சம் கோடி செலுத்தப்பட்டு உள்ளது என கர்நாடகாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2023-02-27 13:01 GMT



பெலகாவி,


கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் பலர் கர்நாடகாவுக்கு தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன்படி, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து கட்சியின் பொது கூட்டங்கள், பேரணிகளில் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் மோடி கடந்த 6-ந்தேதி கர்நாடகம் வருகை தந்து, 50 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கினார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 13-ந்தேதி பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார்.




 

இந்த நிலையில் அவர் இன்று கர்நாடகாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த மாதத்தில் 3-வது முறையாக பிரதமர் மோடி கர்நாடகம் வந்து உள்ளார். கடந்த 2 மாதங்களில் அவர் 5-வது முறையாக கர்நாடகம் வந்து உள்ளார்.

பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சிவமொக்காவுக்கு இன்று வருகை தந்து, ரூ.384 கோடி செலவில் 775 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிவமொக்கா விமான நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இதன்பின்னர், பிற்பகலில் அவர் பெலகாவி நகருக்கு புறப்பட்டார். ரூ.2,253 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசினார். கர்நாடகாவின் பெலகாவி நகரில் கூட்டத்தின் முன் பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவின் அனைத்து விவசாயிகளும் பெலகாவி நகரில் இன்று இணைக்கப்பட்டு இருக்கிறீர்கள்.

கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பெலகாவியில் இருந்து ரூ.16 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது. இந்த தவணை தொகையானது ஹோலி பண்டிகைக்கான வாழ்த்து ஆகும்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டில் விவசாயிகளின் வங்கி கணக்கில் இதுவரை நாங்கள் ரூ.2.5 லட்சம் கோடி செலுத்தி உள்ளோம். அவற்றில் குறிப்பிடும்படியாக பெண் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக வரவு வைக்கப்பட்டு உள்ளது என பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்