வருமான வரி சோதனையில் ரூ.20 கோடி நகை-பணம் சிக்கியது

பெங்களூரு, மைசூருவில் தொழில்அதிபர்களின் வீடுகள், அலுவலங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ரூ.20 கோடிக்கு நகைகள், பணம் சிக்கி உள்ளது.

Update: 2023-05-06 21:52 GMT

பெங்களூரு:-

வருமான வரி சோதனை

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளும் கர்நாடகத்தில் முகாமிட்டு வங்கிகளில் நடைபெறும் பண பரிமாற்றம், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா? என்பதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் தொழில்அதிபர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடந்த 2-ந் தேதியில் இருந்து பெங்களூரு, மைசூருவில் தொழில்அதிபர்கள், நிதி நிறுவன அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.

ரூ.20 கோடி நகைகள், பணம்

அதாவது பெங்களூரு சாந்திநகர், காக்ஸ்டவுன், சிவாஜிநகர், ஆர்.எம்.வி. லே-அவுட், கன்னிகாம் ரோடு, சதாசிவநகர், குமாரபார்க், சஞ்சய்நகர், ஜே.பி.நகர் மற்றும் மைசூரு நகரில் உள்ள தொழில்அதிபர்கள், நிதி நிறுவன அதிபர்களின் வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது. சோதனையின் போது தொழில்அதிபர்களின் வீடுகளில் இருந்து ரூ.15 கோடிக்கு கட்டுகட்டாக பணம், ரூ.5 கோடிக்கு தங்க நகைகள் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

வங்கி லாக்கர்களில் கூட ஒரு தொழில் அதிபர் பல கோடி ரூபாய் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதில், மைசூருவில் மரத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடியும் அடங்கும். ஒட்டுமொத்தமாக ரூ.20 கோடிக்கு நகைகள், பணம் வருமான வரித்துறைக்கு சிக்கி இருந்தது. தொழில்அதிபர்களின் வீடுகளில் சிக்கிய பணம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருந்தார்களா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்