கடந்த 5 நிதி ஆண்டுகளில் ரூ.10.57 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி - மத்திய அரசு தகவல்
5 ஆண்டு காலத்தில் ரூ.7.15 லட்சம் கோடி செயல்படாத சொத்துக்களை வங்கிகள் மீட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி பகவத் காரத் தெரிவித்தார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத், கடந்த 5 நிதி ஆண்டுகளில் வங்கிகள் 10.57 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களை தள்ளுபடி செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த 10.57 லட்சம் கோடி ரூபாயில் 50 சதவீத கடன்கள் பெரும் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவை என்று அவர் கூறியுள்ளார். அதே போல், கடந்த ஐந்தாண்டு காலத்தில் ரூ.7.15 லட்சம் கோடி செயல்படாத சொத்துக்களை(NPA) வங்கிகள் மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி, வாராக் கடன் விவகாரங்களில் கடன் தொகையை மீட்பதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்போது அந்த கடன்கள் சம்பந்தப்பட்ட வங்கியின் சொத்து புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுவிடும். எனினும், இந்த கடன் தொகையை மீட்பதற்கு வங்கி தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.