தெலுங்கானாவில் இருந்து மும்பைக்கு காரில் கடத்திய ரூ.1¼ கோடி கஞ்சா பறிமுதல்
தெலுங்கானாவில் இருந்து மும்பைக்கு காரில் கடத்திய ரூ.1¼ கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
தெலுங்கானாவில் இருந்து கர்நாடக மாநிலம் பீதர் வழியாக மராட்டிய மாநிலம் மும்பைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பீதர் மாவட்டம் மங்கலகி சுங்கச்சாவடியில் பீதர் புறநகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தெலுங்கானாவில் இருந்து வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்தனர்.
ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை விரட்டி சென்றார்கள். சிறிது தூரத்தில் வைத்து காரை போலீசார் மடக்கினர். உடனே காரில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரும் கீழே இறங்கி ஓடிவிட்டார்கள். அந்த காரை கைப்பற்றி போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அந்த காரில் சிறிய அளவிலான சாக்கு மூட்டைகளில் 118 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 18 லட்சம் ஆகும். இதையடுத்து, அந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தெலுங்கானாவில் இருந்து பீதர் வழியாக மும்பைக்கு அந்த கஞ்சா கடத்தி செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் ரூ.8 லட்சம் மதிப்பிலான காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பீதர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். ரூ.1.18 கோடி மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசை பீதர் போலீஸ் சூப்பிரண்டு சென்ன பசவண்ணா வழங்கினார்.