மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம், பா.ஜனதா தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்வோம் - பசவராஜ் பொம்மை

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்வோம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா ஆகியோர் கூறியுள்ளனர்.;

Update:2023-05-14 04:50 IST

பெரும்பான்மை பலம்

கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா அடைந்த தோல்வி குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். பிரதமர் மோடி உள்பட கட்சியின் அனைத்து தலைவா்களும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. பா.ஜனதா தோல்வி குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்வோம். தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம்.

ஒரு தேசிய கட்சியாக நாங்கள் தவறுகளை சரிசெய்து கொண்டு, அடுத்த ஆண்டு(2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம். எங்கள் கட்சியை மீண்டும் வலுப்படுத்தி முழு பலத்துடன் திரும்புவோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

எடியூரப்பா

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க நான் ஓய்வின்றி உழைத்தேன். மக்கள் வழங்கிய தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். வெற்றியும், தோல்வியும் பா.ஜனதாவுக்கு புதியது அல்ல.

பா.ஜனதா தொடக்கத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் நாங்கள் கட்சியை பலப்படுத்தி ஆட்சியை நடத்தியுள்ளோம். பா.ஜனதா தொண்டர்கள் ஆதங்கப்பட தேவை இல்லை. தோல்வி குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்வோம். தவறுகளை சரிசெய்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம். மோடியை மீண்டும் பிரதமராக்குவோம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்