ரேணுகாச்சார்யா சகோதரர் மகன் சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் சகோதரரின் மகன் சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.

Update: 2022-11-07 21:50 GMT

பெங்களூரு:

தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வான ரேணுகாச்சார்யாவின் சகோதரர் மகன் சந்திரசேகர் மர்மமான முறையில் உயிர் இழந்தார். காணாமல் போனதாக கருதப்பட்ட அவரது உடல் ஒன்னாளி அருகே காருடன் மீட்கப்பட்டு இருந்தது. சந்திரசேகர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ரேணுகாச்சார்யா குற்றச்சாட்டு கூறி வருதுடன், போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை என்றும், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் மீதும் குற்றச்சாட்டு கூறி இருந்தார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் சகோதரர் மகன் சந்திரசேகர் சாவு குறித்து போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் போலீசார் மூடி மறைக்க எதுவும் இல்லை. யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும் போலீசாருக்கு இல்லை. சந்திரசேகர் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து முதலில் விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை, தடயவியல் அறிக்கை கிடைக்க தாமதமாவதால், விசாரணையும் தாமதமாகிறது. ரேணுகாச்சார்யா முன்னாள் மந்திரி ஆவார். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் பலருக்கு ஆறுதலும், தைரியமும் கூறியவர். எனவே போலீசார் விசாரணை முடியும் வரை ரேணுகாச்சார்யா சமாதானமாக இருக்க வேண்டும். சந்திரசேகர் மரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்