ரூ.45 கோடி அரசு செலவில் கெஜ்ரிவால் இல்லம் புதுப்பிப்பு; பா.ஜ.க. காலவரையற்ற தர்ணா போராட்டம்
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இல்லம் புதுப்பித்தலுக்கு அரசு சார்பில் ரூ.45 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது என பா.ஜ.க. காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளது.;
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் இல்லம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. எனினும், இந்த புதுப்பித்தலுக்கு டெல்லி அரசு சார்பில் ரூ.45 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது என பா.ஜ.க. குற்றச்சாட்டாக கூறி வருகிறது.
இதுபற்றி சமீபத்தில், டெல்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை தலைமையேற்று செல்லும் கெஜ்ரிவால், நேர்மை மற்றும் எளிமை ஆகியவற்றை ஊக்குவிப்பேன் என அரசியலில் நுழையும்போது அளித்த தனது வாக்குறுதிக்கு துரோகம் இழைத்து விட்டார். ஆடம்பரம் மற்றும் வசதி ஆகியவற்றிற்கு ஆசைப்படுபவர் என குற்றச்சாட்டாக கூறினார்.
தொடர்ந்து அவர் தன்னிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் கூறும்போது, கெஜ்ரிவாலின் இல்லம் வியட்நாம் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மார்பிள் கற்கள், லட்சக்கணக்கான மதிப்பிலான திரை சீலைகள் மற்றும் முன்பே வடிவமைக்கப்பட்ட மர சுவர்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. ஒரேயொரு திரை சீலை மட்டுமே ரூ.7.94 லட்சத்திற்கு கூடுதலான விலை பெறும் என்றும் பத்ரா கூறினார்.
எனினும், முன்பிருந்த கெஜ்ரிவால் வீட்டின் நிலை பற்றிய தகவலை பா.ஜ.க. மறைக்கிறது என கூறி, அதுபற்றிய வீடியோக்களை அவரது ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. அதன்பின்பு, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் டுவிட்டரில், நண்பர் டொனால்டு டிரம்ப்பின் 3 மணிநேர பயணத்திற்கு ரூ.80 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
குஜராத் மற்றும் மத்திய பிரதேச முதல்-மந்திரிகள் ரூ.200 கோடி மதிப்புள்ள விமானங்களில் பறக்கின்றனர். இதுபற்றி விவாதிக்க எந்தவொரு ஊடகத்திற்கும் தைரியம் இல்லை என பதிலடியாக தெரிவித்து உள்ளார். கெஜ்ரிவாலுக்கு 1942-ம் ஆண்டு கட்டப்பட்ட பங்களாவை ஒதுக்கினர்.
அதன் மேற்கூரை 3 முறை இடிந்து விழுந்து விட்டது. அதில் ஒரு முறை மக்கள் தர்பார் நடந்து கொண்டிருந்தது. கெஜ்ரிவால் ரூ.45 கோடி மதிப்பிலான அரண்மனையை கட்டியுள்ளார் என பா.ஜ.க. ஊடகம் கூறுகிறது. நீங்கள் இந்த அரண்மனையை எடுத்து கொள்ளுங்கள். உங்களுடைய ஏழ்மையான வீட்டை கெஜ்ரிவாலுக்கு கொடுத்து விடுங்கள் என்றும் பிரியங்கா பதிவிட்டார்.
இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் இல்லம் டெல்லி அரசு சார்பில் ரூ.45 கோடி செலவு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு உள்ளது என கூறி பா.ஜ.க. கட்சி தொண்டர்கள், டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு வெளியே தொடர்ந்து காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த புனரமைப்பு பணிகள் நடந்து உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.