வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை ரத்து - மத்திய அரசு அறிவிப்பு

வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

Update: 2024-09-13 14:41 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விவசாயிகள் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை(MEP) மத்திய அரசு நிர்ணயம் செய்தது. இதன்படி ஒரு டன் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 550 அமெரிக்க டாலர்(சுமார் 46 ஆயிரம் ரூபாய்) நிர்ணயம் செய்யப்பட்டது.

இதன்படி, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வெளிநாடுகளில் இந்த விகிதத்தை விட குறைவான விலைக்கு விற்க முடியாது. இந்த நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை வரம்பை ரத்து செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை விளைபொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க உதவும் என கூறப்பட்டுள்ளது. வெங்காய உற்பத்தியில் முக்கிய மாநிலமாக திகழும் மராட்டிய மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்