டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - மம்தா அறிவிப்பு
டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.;
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர்.
தொடர்ந்து கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனிடையே பயிற்சி பெண் டாக்டர் கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டும், 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூனியர் டாக்டர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, தகுந்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் 29 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த 29 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜூனியர் டாக்டர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சுகாதார சேவைகளில் ஏற்பட்ட இடையூறால் விலைமதிப்பற்ற 29 உயிர்களை நாம் இழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ.2 லட்சம் நிதி நிவாரணமாக வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.