மக்களின் புகார்கள், பணிகளை நிலுவையில் வைக்காதீர்கள் - துறை செயலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுரை

வாரத்துக்கு 3 மணி நேரம் ஒதுக்கி செயல்படுங்கள் என்றும் மக்களின் புகார்கள், பணிகளை நிலுவையில் வைக்காதீர்கள் என்றும் துறை செயலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

Update: 2023-01-16 20:14 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறையின் செயலாளர் வி.சீனிவாஸ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி முதல் 31-ந்தேதிவரை நாடு முழுவதும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. மக்களின் குறைகளுக்கு தீர்வு காணுதல், நிலுவையில் உள்ள அரசுப்பணிகளை முடித்தல், தேவையற்ற பொருட்களை அகற்றி தூய்மைப்படுத்துதல் ஆகியவை அதன் நோக்கங்கள்.

இதன்படி, 5 லட்சம் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது. 37 லட்சம் கோப்புகள் சரிபார்க்கப்பட்டன. அதனால் நிலுவை பணிகள் கணிசமாக குறைந்தன. தேவையற்ற பொருட்களை அகற்றியதால், 89 லட்சம் சதுர அடி அலுவலக பகுதி மீட்கப்பட்டது. ரூ.370 கோடி வருவாய் கிடைத்தது.

இதில் கிடைத்த அனுபவத்தை பின்பற்றி, தூய்மைப்பணியை தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளுமாறு அனைத்து துறை செயலாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்கள் வாரத்துக்கு குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது இதற்கு ஒதுக்க வேண்டும். மக்களின் குறைகளும், அரசுப்பணிகளும் மிகக்குறைவான அளவே நிலுவையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதை துறை செயலாளர்கள் கண்காணித்து மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்