ஆச்சரியம் ஆனால் உண்மை ...! 6 மணி நேரத்தில் 24 முட்டைகள் ஒரு கோழியின் சாதனை

காலை 8.30 மணிக்கு முதல் முட்டை போட்டது. அதன்பின்பு சிறிது நேரத்திற்கு ஒரு முறை முட்டை போட்டபடி இருந்தது.

Update: 2022-06-14 08:58 GMT

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான பறவை பண்ணைகள் உள்ளன. ஆலப்புழாவை அடுத்த புன்னம்புறாவை சேர்ந்த பிஜூ என்பவர் இங்கு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அங்கு கலப்பின கோழிகளை வளர்த்து வந்தார்.

இவரது பண்ணையில் சுமார் 25 கோழிகள் உள்ளன. நேற்று காலையில் பிஜூ, பண்ணையில் உள்ள கோழிகளை பார்வையிட்டார். அப்போது ஒரு கோழி வித்தியாசமாக மண்ணை நோண்டிக்கொண்டிருந்தது. அதன் அருகில் சென்ற பிஜூ, அந்த கோழியின் காலில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என எண்ணை தடவி விட்டார்.

சிறிது நேரத்தில் அந்த கோழி, தான் தோண்டிய மண்ணுக்குள் முட்டை இட தொடங்கியது. காலை 8.30 மணிக்கு முதல் முட்டை போட்டது. அதன்பின்பு சிறிது நேரத்திற்கு ஒரு முறை முட்டை போட்டபடி இருந்தது.

இதை கண்டு ஆச்சரியமடைந்த பிஜூ, அந்த கோழியை கண்காணித்தபடி இருந்தார். மதியம் 12.30 வரை சுமார் 6 மணி நேரம் அந்த கோழி முட்டை போட்டபடி இருந்தது. மொத்தம் 24 முட்டைகள் போட்டது. அதன்பின்பு அந்த கோழி முட்டை போடுவதை நிறுத்தி கொண்டது.

இதை கண்டு ஆச்சரியம் அடைந்த பிஜூ, இந்த தகவலை கால்நடை மருத்துவ பல்கலை கழக அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அங்கிருந்து கோழி மற்றும் வாத்து பராமரிப்பு துறை உதவி பேராசிரியர் பினோஜ் சாக்கோ, கோழிப்பண்ணைக்கு சென்றார்.

அங்கு 24 முட்டைகள் போட்ட கோழியை ஆய்வு செய்தார். அதுபோட்ட முட்டைகளையும் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, இது அரிதிலும் அரிதான சம்பவம். கோழிக்கு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக தொடர்ந்து முட்டை போட்டிருக்கலாம் என கருதுகிறேன். என்றாலும் கோழியை ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன்பின்பே 24 முட்டை போட்டது எப்படி என்பதை கண்டுபிடிக்க முடியும், என்றார். 24 முட்டை போட்ட கோழியை அந்த பகுதி மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்