ஆஸ்கார் விருது பெற்றவர்களுக்கு மாநிலங்களவை பாராட்டு ''பா.ஜனதா சொந்தம் கொண்டாடக்கூடாது.. மல்லிகார்ஜுன கார்கே

ஆஸ்கார் விருது பெற்ற 2 இந்திய படங்களை உருவாக்கியவர்களுக்கு மாநிலங்களவை பாராட்டு தெரிவித்தது.

Update: 2023-03-15 00:16 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

ஆஸ்கார் விருது பெற்ற 2 இந்திய படங்களை உருவாக்கியவர்களுக்கு மாநிலங்களவை பாராட்டு தெரிவித்தது. இந்த விருதுக்கு பா.ஜனதா சொந்தம் கொண்டாடக்கூடாது என்று மல்லிகார்ஜுன கார்கே அறிவுரை கூறினார்.

பெருமையான தருணம்

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலாகவும், 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' சிறந்த ஆவண குறும்படமாகவும் விருது பெற்றன. அதற்கு ஏற்கனவே ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தநிலையில், நேற்று அந்த படங்களின் படைப்பாளிகளுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை பாராட்டு தெரிவித்தது.

சபை கூடியவுடன் சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது:-

'நாட்டு நாட்டு' பாடலும், 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' குறும்படமும் ஆஸ்கார் விருது பெற்றுள்ளன. 95-வது அகாடமி விருதுகள், நமக்கெல்லாம் பெருமையான தருணமாக அமைந்துள்ளன.

மத்திய மந்திரிகள் பாராட்டு

இந்திய சினிமா, சர்வதேச மயம் ஆவதற்கு இது மேலும் உதவும். இந்தியா சினிமாவுக்கு இது புதிய அங்கீகாரம். இந்திய திரையுலகின் பரந்த திறமை, படைப்பாற்றல், அர்ப்பணிப்பு ஆகியவற்றை உலகம் பாராட்டி இருப்பதை இந்த விருது உணர்த்துகிறது.

2 படங்களுடன் தொடர்புடைய அனைத்து கலைஞர்களையும் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவை முன்னவரும், மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல், 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' குறும்படத்துக்கு கிடைத்த விருது, இந்திய பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கூறினார். மேலும், ஆர்.ஆர்.ஆர். படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பேசியதாவது:-

'பிராண்ட் இந்தியா' வந்து விட்டது. இது ஒரு தொடக்கம்தான். இந்தியா சினிமா, உலகத்தின் கதைக்கூடமாக ஆவதற்கான திறன் படைத்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

சொந்தம் கொண்டாடதீர்

எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:- 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றுத் தந்தவர்களுக்கு நானும் பாராட்டு தெரிவிக்கிறேன். குறிப்பாக, முதல்முறையாக 2 விருதுகளும் தென்னிந்தியாவில் இருந்து கிடைத்துள்ளது. இது எங்களுக்கு கிடைத்த கவுரவம். நாங்கள் பெருமைப்படுகிறோம்.

அதே சமயத்தில், ஆளுங்கட்சிக்கு நான் ஒரே ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த விருதுகளுக்கு சொந்தம் கொண்டாடதீர்கள். அந்த படத்தை இயக்கினோம், அந்த பாடலை எழுதினோம், மோடிஜி இந்த படத்தை இயக்கினார் என்று சொந்தம் கொண்டாடதீர்கள். இது தேசத்தின் பங்களிப்பு.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜெயா பச்சன் (சமாஜ்வாடி), பிரியங்கா சதுர்வேதி (சிவசேனா) உள்பட கட்சி வித்தியாசம் இல்லாமல், அனைத்து கட்சியினரும் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்