ராஜஸ்தான்: டிரைவருக்கு மாரடைப்பு; மத ஊர்வலத்தில் புகுந்த கார் மோதி 2 பேர் பலி

இஷாக் முகமது, குடும்ப உறுப்பினர் ஒருவரை மருத்துவ பரிசோதனைக்காக காரில் அழைத்து சென்றுள்ளார்.

Update: 2024-02-22 15:15 GMT

நகாவர்,

ராஜஸ்தானின் நகாவர் பகுதியில் தேகனா என்ற இடத்தில் விஸ்வகர்ம ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் ஒன்று இன்று நடத்தப்பட்டது. ஜாங்கிட் சமூகத்தினர் நடத்திய இந்த ஊர்வலம் கர்வா காலி பகுதியருகே வந்தபோது, கார் ஒன்று அந்த வழியே சென்றுள்ளது.

அப்போது கார் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அந்த கார் ஊர்வலத்திற்குள் புகுந்து சென்றது. இந்த சம்பவத்தில், 5 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியானது. அதில், கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஊர்வலத்தில் சென்ற மக்கள் மீது பாய்ந்த காட்சிகள் உள்ளன.

வாகனம் மோதியதில் காயமடைந்த நபர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். மற்ற 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அஜ்மீர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், கார் ஓட்டுநரான இஷாக் முகமது (வயது 60) என்பவர், அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவரை மருத்துவ பரிசோதனைக்காக வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். அந்த கார் ஊர்வலத்திற்கு பின்னால் வந்துள்ளது. முகமதுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அவர் காரை செலுத்தும் ஆக்சலரேட்டரை அழுத்தியுள்ளார்.

இதில், கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. பின்பு, சாலையோர சுவர் மீது மோதி கார் நின்றது. முகமதுவை சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்