சிக்கமகளூருவில் அரசு பள்ளி வகுப்பறையில் மழைநீர் கசிந்தது; மாணவர்களின் பாடபுத்தகங்கள் சேதம்

சிக்கமகளூருவில் பெய்த பருவ மழையில் அரசு ஆரம்ப பள்ளி மேற்கூரை வழியாக மழை நீர் கசித்ததில் மாணவர்களின் பாட புத்தகம் முற்றிலும் சேதமடைந்தது.

Update: 2022-06-04 14:41 GMT

சிக்கமகளூரு;

பருவ மழை பாதிப்பு

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. சிக்கமகளூருவில் நேற்று பெய்த மழையில் ஏராளமான விளை நிலங்கள் சேதமடைந்தது. நல்லகெரே கிராமத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் விளைவித்திருந்த தக்காளி மழையால் முற்றிலும் நாசமானது. மேலும் சில இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் சிக்கமகளூரு மாவட்ட கலசா பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பள்ளியில் 25 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 25 ஆண்டு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளியின் கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் சிலர் இந்த பள்ளி கட்டிடத்தை புதுப்பித்து கொடுக்கும்படி மாநில அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்துவிட்டனர். ஆனால் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பாட புத்தகங்கள் சேதம்

இந்த நிலையில் நேற்று பெய்த மழையால் பள்ளியின் மேற்கூரையில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது. இதனால் மேற்கூரையில் இருந்து மழை நீர் பள்ளி மாணவர்கள் வைத்திருந்த பாடபுத்தகத்தின் மீது விழுந்து சேதமடைந்தது. இதையடுத்து நேற்று மாணவர்கள் அந்த புத்தகத்தை வெயிலில் காய வைத்து மீண்டும் பயன்படுத்தினர்.

இந்த தகவல் சமூக ஆர்வலர்களுக்கு கிடைத்தது. அவர்கள் உடனே மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில அரசுக்கு நேரடியாக கோரிக்கை வைத்தனர். பள்ளி கட்டிடத்தை சீரமைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்..

ஏற்கனவே அரசு பள்ளி பாடபுத்தகத்தில் சில தலைவர்களின் வாழ்க்கை வரலாறு நீக்கப்பட்டிருப்பதாகவும், சிலரை தவறாக சித்தரித்திருப்பதாகவும் புகார் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரசு பள்ளிகள் தொடர் மழைக்கு சிதிலமடைந்து வருவது மாநில அரசின் அலட்சிய போக்கை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்