கோலார் தங்கவயலில் திடீர் கனமழை; 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது
கோலார் தங்கவயலில் நேற்று திடீரென கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் அந்த மழை கொட்டி தீர்த்தது.
கோலார் தங்கவயல்:
கோலார் தங்கவயலில் நேற்று திடீரென கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் அந்த மழை கொட்டி தீர்த்தது.
திடீரென மழை பெய்தது
கர்நாடகத்தில் தற்போது வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வறண்ட பூமி என்று அழைக்கப்படும் கோலார் மாவட்டத்தில் மக்கள் வெயிலின் கொடுமையால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று கோலார் தங்கவயலில் காலை முதலே வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. மதியத்திற்கு பிறகு வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. மாலை 4.30 மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது.
2 மணி நேரம் கொட்டி தீர்த்தது
முதலில் லேசாக பெய்ய ஆரம்பித்த மழை பின்னர் கனமழையாக கொட்டியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை பெய்ய ஆரம்பித்தவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் வேலைக்கும், வெளியில் சென்றிருந்தவர்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் சிரமம் அடைந்தனர்.
இந்த மழையால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். மழை வெள்ளத்தால் ஆண்டர்சன்பேட்டை 2-வது பிளாக், பாரதபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
ஆலங்கட்டி மழை
இதுபோல் கோலார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை காரணமாக கோலார் நகரம் முழுவதும் வெள்ளக்காடானது. சாலைகளில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள், கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கின. மேலும் பங்காருபேட்டை, மாலூர், சீனிவாசப்பூர், முல்பாகல் ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யக்கூறி மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா உத்தரவிட்டார். அதன்பேரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.