விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பாதைகள் சரி செய்யப்பட்டது: ரெயில்வே அமைச்சகம் தகவல்
ஒடிசா ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.;
கொல்கத்தா,
நாட்டை உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் மீட்புப்பணிகள் முடிவடைந்து மறு சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் உள்ள இரண்டு ரெயில் பாதைகள் சரி செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே மந்திரி அஸ்விணி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மின்சார கேபிள் இணைப்புகள் சரிசெய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், விபத்து நடந்த இடத்தில் லூப் லைன்கள் உட்பட அனைத்து பாதைகளையும் சரிசெய்ய அதிக நேரம் தேவைப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேல்நிலை மின் கேபிளை சரிசெய்யும் வரை, சரிசெய்யப்பட்டுள்ள இரண்டு வழித்தடத்தில் டீசல் இன்ஜின்களை மட்டுமே இயக்க முடியும். மேல்நிலை மின்சார கேபிள் இணைப்பு பணிகள் சரி செய்யப்பட்ட பின், மின்சார ரெயில்கள் இயக்கப்படும். இதற்கு மேலும் மூன்று நாட்கள் ஆகும் என அவர்கள் தெரிவித்தனர்.