ரெயில்வே திட்டங்களுக்காக கர்நாடகத்திற்கு ரூ.7,561 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய மந்திரி பியூஸ்கோயல்

ரெயில்வே திட்டங்களுக்காக கர்நாடகத்திற்கு ரூ.7,561 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பியூஸ்கோயல் கூறியுள்ளார்.

Update: 2023-02-04 21:25 GMT

மத்திய தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொருளாதார நடவடிக்கைகள்

மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இது வேலை வாய்ப்பு, அதிகளவில் பொருளாதார நடவடிக்கைகள், சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவி, நல்ல எதிர்காலம், நிலையான வளர்ச்சிக்கு உகந்த பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

வீடுகள் கட்டுதல், அனைவருக்கும் மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு, டிஜிட்டல் தொடர்பால் கவனிக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. கர்நாடகத்தின் தகவல் தொழில்நுட்பத்துறையின் பங்களிப்பு முக்கியமானது.

பத்ரா மேலணை திட்டம்

தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே திட்டங்களுக்கு கர்நாடகத்திற்கு ரூ.7 ஆயிரத்து 561 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு தேவையான நிதி வழங்கப்படும்.

பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.5,300 கோடி வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு-மைசூரு இடையே அதிவிரைவுச்சாலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சாலை விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இதன் மூலம் பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு 1½ மணி நேரத்தில் சென்றடைய முடியும். வருகிற 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும்.

பொய் குற்றச்சாட்டுகள்

உலகின் 5-வது பெரிய பொருளாதார பலமிக்க நாடாக நமது இந்தியா மாறியுள்ளது. வரும் ஆண்டுகளில் நமது நாடு 3-வது இடத்திற்கு முன்னேறும். காங்கிரஸ் கட்சி எங்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறது. இதனால் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படாது.

இவ்வாறு பியூஸ்கோயல் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்