ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று (திங்கட்கிழமை) ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.

Update: 2023-01-30 00:21 GMT

ஸ்ரீநகர்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.

இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை கடந்து தனது இறுதி இலக்கான ஸ்ரீநகரை எட்டியுள்ளது.

3,500 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தை கடந்துள்ள இந்த யாத்திரையில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுனர்கள், அறிவியல்-தொழில்நுட்ப அறிஞர்கள், திரைத்துறை, விளையாட்டுத்துறை சாதனையாளர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அத்துடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களும் ராகுல் காந்தியுடன் தினந்தோறும் யாத்திரையில் பங்கேற்று வந்தனர். அத்துடன் ஏராளமான பொதுமக்களும் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு

கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாகி வந்த இந்த யாத்திரை இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. ஸ்ரீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து தனது யாத்திரையை அவர் நிறைவு செய்கிறார்.

இதைத்தொடர்ந்து எஸ்.கே. மைதானத்தில் பிரமாண்ட நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த நிறைவு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

இதில் பங்கேற்குமாறு 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். அத்துடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய கொடி ஏற்றினார்

ராகுல் காந்தியின் பாதயாத்திரை ஸ்ரீநகரை அடைந்துள்ள நிலையில், நேற்று லால் சவுக்கில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மணிக்கோபுரத்தில் அவர் தேசிய கொடி ஏற்றினார்.

அவருடன் சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா மற்றும் காஷ்மீரை சேர்ந்த கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

லால் சவுக்கில் இன்று தேசிய கொடி ஏற்ற திட்டமிட்டிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒருநாள் முன்கூட்டியே இந்த கொடி ஏற்ற நிகழ்ச்சி நடந்தது.

இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் தளத்தில், 'காஷ்மீரில் வேறு இடங்களில் அனுமதி வழங்கப்படாததால், கட்சி அலுவலகத்தில் 30-ந் தேதி (இன்று) ராகுல் காந்தி தேசிய கொடியை ஏற்ற வேண்டும். எனினும் 29-ந் தேதியே கொடி ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், லால் சவுக்கில் இன்று (நேற்று) கொடி ஏற்ற நிர்வாகம் அனுமதித்தது' என குறிப்பிட்டு இருந்தார்.

வரலாறு காணாத பாதுகாப்பு

ஸ்ரீநகரின் லால் சவுக்கில் ராகுல் காந்தியின் கொடி ஏற்ற நிகழ்ச்சிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக பிரதமருக்கு இணையாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த 10 நிமிட நிகழ்ச்சிக்காக லால் சவுக்கை சுற்றி சுமார் 1 கி.மீ. சுற்றளவுக்கு நேற்று முன்தினம் இரவு முதலே சீல் வைக்கப்பட்டது. லால் சவுக்குக்கு செல்லும் அனைத்து சாலைகளும் தடுப்பு வேலிகள் மற்றும் முள்வேலிகள் அமைத்து மூடப்பட்டன.

வாகன இயக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது. வார சந்தை, கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

முன்னதாக காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை பல்வேறு இடையூறுகளை சந்தித்தது. குறிப்பாக பாதுகாப்பு குளறுபடியால் கடந்த 27-ந் தேதி அவர் பாதயாத்திரையை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

இதனால் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடுமையான வார்த்தைப்போர் ஏற்பட்ட நிலையில் நேற்று ராகுல் காந்தியின் கொடி ஏற்ற நிகழ்வுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநகரில் இன்று நடைபெறும் நிறைவு விழாவுக்கும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்