ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு; முன்னாள் மந்திரி ரமாநாத் ராய் பேட்டி

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று முன்னாள் மந்திரி ரமாநாத் ராய் புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2022-10-31 19:00 GMT

மங்களூரு;


காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரை

தட்சிண கன்னடாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி ரமாநாத் ராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரசின் ஒற்றுமை யாத்திரை குறித்து பா.ஜனதா குறைகூறி வருகிறது. ஆனால் அவர்கள் எதிர்பாா்த்தது போன்று இல்லாமல் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், தலித்துக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை ஒன்றிணைக்கும் யாத்திரை இது. இதற்கு முன்னதாக காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடத்தப்பட்டது.

ரத்த கண்ணீர் வடித்தனர்

அப்போது பா.ஜனதாவில் ரத்த கண்ணீர் வடித்தனர். காங்கிரஸ் மீது வெறுப்பு அதிகமானது. அதை தொடர்ந்து காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரையை கையில் எடுத்துள்ளது. இந்த யாத்திரையின் மூலம் மக்கள் மீண்டும் ஒன்றுபட்டு வருகின்றனர். இந்தியாவை பற்றி பேசும் பா.ஜனதா, ஏன் காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரையை குறை கூறுகின்றனர்.

நாட்டை உருவாக்கியதில் காங்கிரசின் பங்கு மிக முக்கியம். ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் மதத்தின் அடிப்படையில் நாடு பிளவுபடுத்தப்படுகிறது. வன்முறையை தூண்டும் செயலில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதைத்தான் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

பா.ஜனதாவில் கோஷ்டி பூசல்

காங்கிரசாருக்கு சி.டி.ரவி, ஜே.பி.நட்டா போன்றோரை பற்றி பேச வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் சி.டி.ரவி, ஜே.பி.நட்டாவிடம் உண்மை தன்மை இருப்பதில்லை. ஆனால் மல்லிகார்ஜூன கார்கே உண்மையை பேசுபவர். அரசியலில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்.

காங்கிரஸ் கட்சியில் பிளவு உள்ளது என்பவர்களுக்கு இது ஒரு முற்றுப்புள்ளி. ஆனால் பா.ஜனதாவில்தான் கோஷ்டி பூசல் உள்ளது. இதுபற்றி பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல், எச்.விஸ்வநாத் ஆகியோர் வெளிப்படையாக பேசியுள்ளனர். இதற்கு பா.ஜனதா தலைமை என்ன பதில் கூறப்போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்