மக்களவை கூட்டத் தொடரில் பங்கேற்க என்னை அனுமதியுங்கள் - சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி கோரிக்கை
அவதூறு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே. மிஷ்ரா ஆகியோர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை கடந்த மாதம் 21-ந்தேதி விசாரித்தது. மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்டு 4-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் அவதூறு வழக்கில் தான் குற்றவாளி இல்லை என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால், அதை முன்னதாகவே செய்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
எனவே, தன் மீதான தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும், மக்களவையின் தற்போதைய அமர்வுகளிலும், இதன்பிறகு நடைபெறும் அமர்வுகளிலும் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.