ராகுல் காந்தியை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியீடு: பா.ஜனதா ஐ.டி. பிரிவு தலைவர் மீது வழக்குப்பதிவு

ராகுல்காந்தியை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பா.ஜனதா ஐ.டி. பிரிவு தலைவர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-06-28 21:11 GMT

பெங்களூரு:

ராகுல்காந்தியை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பா.ஜனதா ஐ.டி. பிரிவு தலைவர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராகுல்காந்தி

பா.ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு(ஐ.டி.) தேசிய தலைவராக இருப்பவர் அமித் மாளவியா. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அகில இந்திய காங்கிரசஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை அவதூறாக சித்தரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை இழிவுப்படுத்தும் நோக்கிலும், மதக்கலவரம் மற்றும் மக்களுக்கு எதிரானவராக ராகுல்காந்தியை முன்னிலைப்படுத்தும் நோக்கிலும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருந்தது. மேலும் ராகுல் காந்தியை 'வெளிநாட்டு படைகளின் சிப்பாய்' என்றும் கிண்டலாக வர்ணித்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அமித் மாளவியா மீது பெங்களூரு போலீசில் கர்நாடக காங்கிரஸ் கட்சி பிரமுகரான ரமேஷ் பாபு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 153-ஏ(மதம், இனம், மொழி உள்ளிட்ட மக்களின் விரோத உணர்ச்சிகளை தூண்டுதல்), 505(2)-(இருபிரிவுகளுக்கு இடையே தவறான எண்ணத்தை உருவாக்குதல்), 120(பி)(சதித்திட்டம் தீட்டுதல்) மற்றும் 34(கூட்டுச்சதி) ஆகிய சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கர்நாடக மக்களுக்கு...

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மந்திரி பிரியங்கா கார்கே, 'நாங்கள் சட்டத்தையோ அல்லது அரசியலமைப்பையோ அமல்படுத்தினால் பா.ஜனதா கட்சிக்கு அதில் சிக்கல் ஏற்படுகிறது. போலி செய்திகள் கட்டுப்படுத்தப்படும் என கர்நாடக மக்களுக்கு நான் உறுதி அளித்துள்ளேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்