ஏப்ரல் 22-ந் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல்காந்திக்கு நோட்டீஸ்
எம்.பி. பதவியை இழந்த ராகுல்காந்தி, ஏப்ரல் 22-ந் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று அவருக்கு மக்களவையின் வீட்டுவசதி குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.;
அரசு பங்களா
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ராகுல்காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற மக்களவை செயலகம் அறிவித்தது.
எம்.பி. என்ற முறையில், ராகுல்காந்திக்கு டெல்லி துக்ளக் லேன் சாலையில் 12-ம் எண் முகவரி கொண்ட அரசு பங்களாவை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது. அந்த வீட்டில்தான் ராகுல்காந்தி குடியிருந்து வருகிறார். எம்.பி. பதவியை இழந்து விட்டதால், அந்த வீட்டை அவர் காலி செய்ய வேண்டி இருக்கிறது.
நோட்டீஸ்
எனவே, ஏப்ரல் 22-ந் தேதிக்குள் அந்த பங்களாவை காலி செய்யுமாறு ராகுல்காந்திக்கு மக்களவையின் வீட்டு வசதிக்குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பொதுவாக, எம்.பி. பதவியை இழந்த நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒருவேளை, ராகுல்காந்திக்கு கால அவகாசம் தேவைப்பட்டால், வீட்டு வசதிக்குழுவுக்கு கடிதம் எழுதலாம் என்றும், அதை அக்குழு பரிசீலிக்கும் என்றும் மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.
மறுஆய்வு
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு அறிவிக்கையை டெல்லி மாநகராட்சி மன்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு மக்களவை செயலகம் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.
அதனால், எம்.பி. என்ற முறையில் ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த வசதிகள், மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.