அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்

40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ராகுல் காந்தி இன்று பெங்களூரு கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

Update: 2024-06-07 06:07 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். இது தான் அவர்களின் பிரசாரத்தில் முக்கிய விஷயமாக இடம் பெற்றது. பா.ஜனதாவின் தோல்விக்கு இந்த குற்றச்சாட்டு முக்கியமான காரணமாக அமைந்தது.

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் மீது பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பா.ஜனதா வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை கடைசியாக கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் முதல்-மந்திரி சித்தராமையா, ராகுல் காந்தி, டி.கே.சிவக்குமார் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் முதல்-மந்திரி சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நேரில் ஆஜரானார்கள். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வக்கீல், அவர் நேரில் ஆஜராக வாய்தா கேட்டார். இதையடுத்து 7-ந் தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ராகுல் காந்தி பெங்களூரு கோர்ட்டில் நேரில் ஆஜரானார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை பெங்களூரு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்