'பறக்கும் முத்தம்' : ராகுல்காந்தி மீது சபாநாயகரிடம் 20 பெண் எம்.பி.க்கள் புகார்

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட பெண் எம்.பி.க்களை பார்த்து ராகுல்காந்தி ‘பறக்கும் முத்தம்’ அளித்ததாக சபாநாயகரிடம் 20 பெண் எம்.பி.க்கள் புகார் அளித்தனர்.

Update: 2023-08-09 23:21 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பேசி முடித்து விட்டு வெளியேறினார். அவருக்கு எதிராக பா.ஜனதா எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அதே சமயத்தில், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பேசத் தொடங்கினார்.

உடனே, ராகுல்காந்தி திரும்பி பார்த்து, ஸ்மிரிதி இரானி மற்றும் பெண் எம்.பி.க்களை பார்த்து 'பறக்கும் முத்தம்' கொடுத்தபடி வெளியேறிச்சென்றார்.

புகார்

இந்நிலையில், சபாநாயகர் ஓம்பிர்லாவை பா.ஜனதாவை சேர்ந்த பெண் எம்.பி.க்கள் சந்தித்தனர். பறக்கும் முத்தம் அளித்த ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். அதில், 20-க்கு மேற்பட்ட பா.ஜனதா பெண் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரான மத்திய மந்திரி ஷோபா கரண்ட்லஜே நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்மிரிதி இரானி மற்றும் அனைத்து பெண் எம்.பி.க்களை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு ராகுல்காந்தி வெளியேறினார். இது, முற்றிலும் தவறான செயல். ஒரு எம்.பி.யின் முறையற்ற, அநாகரீக நடத்தை.

நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்பு இத்தகைய சம்பவம் நடந்தது இல்லை என்று மூத்த எம்.பி.க்கள் தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் 'பறக்கும் முத்தம்' அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சபாநாயகரிடம், கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து, ராகுல்காந்திக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளோம் என்று அவர் கூறினார்.

பெண்விரோத செயல்

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்தி செய்தது போன்ற பெண்விரோத செயலை நாடாளுமன்றத்தில் இதற்கு முன்பு யாரும் செய்தது இல்லை. பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்க சட்டம் இயற்றும் மக்களவை, இத்தகைய பெண் விரோத செயலுக்கு சாட்சியாக இருக்கிறது. அவரை கூண்டில் ஏற்ற வேண்டாமா?

சாலையில் இதுபோன்ற அநாகரீக செயல்கள் நடப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். பெண் விரோதம் என்பது இந்திராகாந்தி குடும்பத்தின் குணங்களில் ஒன்று என்று எங்களுக்கு தெரியாது என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்