பஞ்சாப் நாடாளுமன்ற விவகார மந்திரி திடீர் பதவி விலகல்; புதிய மந்திரி நாளை பதவியேற்பு
பஞ்சாப்புக்கான நாடாளுமன்ற விவகார துறை மந்திரி இந்தர்பீர் சிங் நிஜ்ஜார் திடீரென்று பதவி விலகி உள்ளார்.
சண்டிகர்,
பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அவரது அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகார துறை மந்திரியாக இந்தர்பீர் சிங் நிஜ்ஜார் என்பவர் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் அந்த பதவியில் இருந்து விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்து உள்ளேன் என அவர் கூறியுள்ளார். வேறு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து, பஞ்சாப் அமைச்சரவையில், குர்மீத் சிங் குடியான் மற்றும் பால்கர் சிங் ஆகியோர் நாளை மந்திரிகளாக பதவியேற்று கொள்ள இருக்கின்றனர்.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் அனைத்து எம்.பி.க்கள், மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி பகவந்த் மான் நாளை இரவு விருந்து அளிக்க முடிவு செய்து உள்ளார்.
இதில், கலந்து கொள்ள அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலும் நாளைக்கு சண்டிகர் வருகை தருகிறார். இதற்காக பகவந்த் மான் சார்பில் அனைவருக்கும் அழைப்பிதழும் வழங்கப்பட்டு உள்ளது. இதில், அமைச்சரவை விரிவாக்கம் பற்றி பரிசீலனை செய்யப்படும் என கூறப்படுகிறது.