பஞ்சாப் சுகாதார மந்திரி அதிரடி நீக்கம்: ஊழல் புகாரில் கைது

பதவி ஏற்று 100 நாட்களுக்குள் பஞ்சாப் சுகாதார மந்திரி விஜய் சிங்கலா, அதிரடியாக நீக்கப்பட்டார். ஊழல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-24 23:39 GMT

சண்டிகார்,

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து அந்த மாநில முதல்-மந்திரியாக பகவந்த் மான் கடந்த மார்ச் 16-ந் தேதி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து 10 மந்திரிகள் மார்ச் 19-ந் தேதி பதவி ஏற்றனர்.

அவர்களில் சுகாதார மந்திரியாக பதவி ஏற்றவர் விஜய் சிங்கலா (வயது 52). பல் டாக்டர். இவர் பதவி ஏற்று 100 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் ஊழல் புகாரில் அதிரடியாக நேற்று பதவியை விட்டு நீக்கப்பட்டார். அது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையொட்டி முதல்-மந்திரி பகவந்த் மான் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஆம் ஆத்மி கட்சி நேர்மையான கட்சி. 1 ரூபாய் லஞ்சத்தைக் கூட எங்கள் அரசு சகித்துக்கொள்ளாது. இந்த நம்பிக்கையை நான் மாநிலம் முழுவதும் மேற்கொண்ட பயணங்களின்போது மக்களிடம் பார்த்து இருக்கிறேன். ஊழலில் இருந்து யாரேனும் தங்களை மீட்டெடுப்பார்கள் என்று மக்கள் காத்திருந்தார்கள். மாநிலத்துக்கு முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிரான இலக்கை எனக்கு தெளிவுபடுத்தினார். இதை நிறைவேற்றுவதாக நான் வாக்குறுதி அளித்தேன். சமீபத்தில் சுகாதார மந்திரி மீதான ஊழல் புகார் என் கவனத்துக்கு வந்தது. ஊடகங்களுக்கு அது தெரியாது.

டெண்டர்கள் மீது சுகாதார மந்திரி 1 சதவீதம் கமிஷன் கேட்கிறார் என தெரிய வந்தது. இதனால் நான் சுகாதார மந்திரி மீது கடும் நடவடிக்கை எடுக்கிறேன். அவரை மந்திரி சபையில் இருந்து நீக்குகிறேன். விஜய் சிங்கலா தன் மீதான புகார்களை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் முதல்-மந்திரி பகவந்த் மான் அதில் கூறி உள்ளார்.

ஊழல் புகாருக்குள்ளான சுகாதார மந்திரி விஜய் சிங்கலாவை பதவியை விட்டு நீக்கிய பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் நடவடிக்கையை ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் நெகிழ்ந்து போய் பாராட்டி உள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "பகவந்த் மான், உங்களால் பெருமிதம் கொள்கிறேன். உங்கள் நடவடிக்கை, எனது கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. ஒட்டுமொத்த தேசமும் ஆம் ஆத்மி கட்சியைப் பார்த்து பெருமிதம் கொள்கிறது" என கூறி உள்ளார்.

பதவி பறிக்கப்பட்ட விஜய் சிங்கலா மீது ஊழல் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மான்சா தொகுதியில் விஜய் சிங்கலா, பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் வேட்பாளருமான சுப்தீப் சிங் சித்துவை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்